உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: ஐதராபாத் டெஸ்டில்

இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்து: ஐதராபாத் டெஸ்டில்

ஐதராபாத்: ஐதராபாத் டெஸ்டில் சொதப்பிய இந்திய அணி, 28 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. தனிஒருவனாக 'சுழலில்' மிரட்டிய இங்கிலாந்தின் ஹார்ட்லி, 7 விக்கெட் சாய்த்தார்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் முதல் டெஸ்ட் நடந்தது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 246, இந்தியா 436 ரன் எடுத்தன. மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 316 ரன் எடுத்து, 126 ரன் முன்னிலை பெற்றிருந்தது.

போப் 196 ரன்

நான்காவது நாள் ஆட்டத்தில் போப் தனது ரன் வேட்டையை தொடர்ந்தார். இவருக்கு 'டெயிலெண்டர்கள்' ஒத்துழைப்பு தந்தனர். அஷ்வின், ஜடேஜாவின் 'சுழல்' எடுபடவில்லை. பும்ரா 'வேகத்தில்' ரேகன்(28) அவுட்டானார். மறுபக்கம் போப் அபாரமாக ஆட, இங்கிலாந்து 400 ரன்களை கடந்தது. முன்னிலை அதிகரிக்க, இந்தியாவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. ஹார்ட்லி, 34 ரன் எடுத்தார். பும்ரா பந்தில் 'போல்டான' போப்(196 ரன், 21 பவுண்டரி) இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 420 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இந்தியாவுக்கு 231 ரன்னை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

விக்கெட் மடமட

சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியின் 'டாப்-ஆர்டரை', 24 வயது அறிமுக சுழற்பந்துவீச்சாளர் ஹார்ட்லி தகர்த்தார். இவரது ஒரே ஓவரில் ஜெய்ஸ்வால்(15), சுப்மன் கில்(0) அவுட்டாகினர். ஹார்ட்லி பந்தில் கேப்டன் ரோகித் சர்மாவும்(39) நடையை கட்ட, இந்திய அணி 3 விக்கெட்டுக்கு 63 ரன் எடுத்து தவித்தது. முன்னதாக களமிறக்கப்பட்ட அக்சர் படேல், ரேகன் அகமது ஓவரில் 3 பவுண்டரி விளாசினார். ஹார்ட்லி வலையில் அக்சர்(17) சிக்கினார். ஜோ ரூட் பந்தில் ராகுல்(22) எல்.பி.டபிள்யு., ஆனார். இதற்கு 'ரிவியு' கேட்ட போதும், பலன் கிடைக்கவில்லை.

ஜடேஜா வீண்

ரூட் பந்தை தட்டிவிட்ட ஜடேஜா(12) தேவையில்லாமல் ஒரு ரன்னுக்கு ஓடினார். இதை பார்த்த கேப்டன் ஸ்டோக்ஸ் பந்தை நேரடியாக 'த்ரோ' செய்ய பரிதாபமாக ரன் அவுட்டானார். தொடைப்பகுதி பிடிப்பால் அவதிப்பட்டு வரும் ஜடேஜா, அடுத்த டெஸ்டில் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. லீச் பந்தில் மோசமான 'ஷாட்' அடித்த ஸ்ரேயாஸ்(13) அநியாயமாக அவுட்டாக, இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 120 ரன் எடுத்து தத்தளித்தது.

ஹார்ட்லி 5 விக்கெட்

பின் அஷ்வின், பரத் சேர்ந்து சற்று போராடினர். இவர்கள் 8வது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த நிலையில், மீண்டும் ஹார்ட்லி தொல்லை கொடுத்தார். பரத்தை(28) அவுட்டாக்கி, தனது 5வது விக்கெட்டை பெற்றார். அஷ்வினும்(28), ஹார்ட்லி பந்தில் வீழ்ந்தார். கடைசியில் சிராஜ்(12) விக்கெட்டை கைப்பற்றிய ஹார்ட்லி, இந்திய அணியின் கதையை முடித்தார். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 202 ரன்களில் ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது. நான்கு நாளில் வென்ற இங்கிலாந்து, தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது டெஸ்ட் வரும் பிப். 2ல் விசாகப்பட்டனத்தில் துவங்குகிறது.

வீழ்ந்தது ஏன்

இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில்,''231 ரன் என்பது எட்டக்கூடிய இலக்கு தான். ஆனால் நமது 'டாப்-ஆர்டர்' பேட்டர்கள் துணிச்சலாக விளையாட தவறினர். இவர்களுக்கு 'டெயிலெண்டர்கள்' பாடம் எடுத்தனர். இங்கிலாந்தின் போப் சிறப்பாக பேட் செய்தார்,''என்றார்.

ஸ்டோக்ஸ் உற்சாகம்

இந்திய மண்ணில் 'பாஸ் பால்' திட்டம் மூலம் அதிரடியாக பேட் செய்த இங்கிலாந்து அணி, முதல் டெஸ்டில் வென்றது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூறுகையில்,''ஹார்ட்லி சிறப்பாக பந்துவீசினார். போப் அசத்தல் சதம் அடித்தார். நுாறு சதவீதம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ