உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ரோகித் சர்மா விளாசல்

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா: ரோகித் சர்மா விளாசல்

செயின்ட் லுாசியா: 'டி-20' உலக கோப்பை அரையிறுதிக்கு இந்திய அணி முன்னேறியது. கேப்டன் ரோகித் அரைசதம் விளாச, 'சூப்பர்-8' போட்டியில் 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லுாசியாவில் நடந்த 'டி-20' உலக கோப்பை 'சூப்பர்-8' போட்டியில் ('பிரிவு-1') இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் மிட்சல் மார்ஷ் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

ரோகித் விளாசல்

இந்திய அணிக்கு கோலி (0) ஏமாற்றினார். இந்திய அணி 4.1 ஓவரில் 37/1 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின், ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் 4 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த கேப்டன் ரோகித் சர்மா, கம்மின்ஸ் வீசிய 5வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்து அரைசதம் எட்டினார். ரிஷாப் பன்ட் (15) நிலைக்கவில்லை. ஸ்டார்க் 'வேகத்தில்' ரோகித் (92) அவுட்டானார். சூர்யகுமார் (31), ஷிவம் துபே (28) ஓரளவு கைகொடுத்தனர். ஸ்டாய்னிஸ் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் அடித்தார் பாண்ட்யா.இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 205 ரன் எடுத்தது. பாண்ட்யா (27), ஜடேஜா (9) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹெட் அபாரம்

சவாலான இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் (6) ஏமாற்றினார். அர்ஷ்தீப் சிங் வீசிய 3வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் கேப்டன் மார்ஷ். பும்ரா வீசிய 4வது ஓவரில் 3 பவுண்டரி விரட்டிய ஹெட், ஹர்திக் பாண்ட்யா வீசிய 6வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். குல்தீப் 'சுழலில்' மார்ஷ் (37) சிக்கினார். பாண்ட்யா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ஹெட், 24 பந்தில் அரைசதம் எட்டினார். மேக்ஸ்வெல் (20), ஸ்டாய்னிஸ் (2) சோபிக்கவில்லை. பும்ரா பந்தில் ஹெட் (76) அவுட்டானார். மாத்யூ வேட் (1), டிம் டேவிட் (15) ஏமாற்றினர்.கடைசி ஓவரில் வெற்றிக்கு 29 ரன் தேவைப்பட்டன. பாண்ட்யா பந்துவீசினார். இந்த ஓவரில் 4 ரன் மட்டும் கிடைத்தது. ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 181 ரன் எடுத்து தோல்வியடைந்தது. ஸ்டார்க் (4), கம்மின்ஸ் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.

பதிலடி

கடந்த ஆண்டு உலக கோப்பை (50 ஓவர்) பைனலில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இதற்கு நேற்று பதிலடி கொடுத்த இந்தியா, ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்புக்கு சிக்கலை ஏற்படுத்தியது.

ஆஸி., நிலை என்ன

'சூப்பர்-8' சுற்றுக்கான 'பிரிவு-1'ல் மூன்று போட்டியிலும் வென்ற இந்தியா (6 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறியது. இதில் இங்கிலாந்தை சந்திக்க உள்ளது. அடுத்த இரு இடங்களில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் (தலா 2 புள்ளி) உள்ளன. இன்று வங்கதேசத்துக்கு எதிராக வென்றால் ஆப்கானிஸ்தான் (4 புள்ளி) அரையிறுதிக்கு முன்னேறும். ஒருவேளை தோல்வியடைந்தால், வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளி பெறும். இதில் 'ரன்-ரேட்' அடிப்படையில் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.

200 'சிக்சர்'

இந்தியாவின் ரோகித் சர்மா, சர்வதேச 'டி-20' அரங்கில் 200 சிக்சர் விளாசிய முதல் வீரரானார். இதுவரை 157 போட்டியில், 203 சிக்சர் அடித்துள்ளார். அடுத்த இடத்தில் நியூசிலாந்தின் கப்டில் (173 சிக்சர்) உள்ளார்.

எட்டு சிக்சர்

எட்டு சிக்சர் விளாசிய ரோகித், 'டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரரானார். இதற்கு முன், 2007ல் டர்பனில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் யுவராஜ் சிங் 7 சிக்சர் அடித்திருந்தார்.

92 ரன்

'டி-20' உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார் ரோகித் (92). இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 79* ரன் (2010, பிரிட்ஜ்டவுன்) எடுத்திருந்ததார்.* 'டி-20' உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த இந்திய வீரர்கள் வரிசையில் 2வது இடம் பிடித்தார் ரோகித். முதலிடத்தில் ரெய்னா (101 ரன், எதிர்: தென் ஆப்ரிக்கா, 2010) உள்ளார்.* தவிர, 'டி-20' உலக கோப்பையில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த கேப்டன்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார் ரோகித். முதலிடத்தில் வெஸ்ட் இண்டீசின் கெய்ல் (98 ரன், எதிர்: இந்தியா, 2010) உள்ளார்.

205 ரன்

'டி-20' உலக கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த அணிகளுக்கான வரிசையில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீசுடன் (205/4, கொழும்பு, 2012) பகிர்ந்து கொண்டது இந்தியா (205/5).


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை