| ADDED : பிப் 16, 2024 09:54 PM
மோங் கோக்: சீனாவுக்கு எதிரான கிழக்கு ஆசிய கோப்பை லீக் போட்டியில் ஜப்பான் துவக்க ஜோடி 258 ரன் குவித்து சாதனை படைத்தது.கிழக்கு ஆசிய கோப்பை ('டி-20') கிரிக்கெட் 3வது சீசன் ஹாங்காங்கில் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' ஜப்பான், சீனா, ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இதன் லீக் போட்டியில் ஜப்பான், சீனா அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த ஜப்பான் அணிக்கு லாச்லான் யமமோட்டா-லேக், கேப்டன் கென்டல் கடோவாக்கி பிளமிங் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. சிக்சர், பவுண்டரி மழை பொழிந்த இருவரும் சதம் விளாசினர். ஜப்பான் அணி 20 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 258 ரன் குவித்தது. யமமோட்டா-லேக் (134 ரன், 68 பந்து, 12 சிக்சர், 8 பவுண்டரி), கடோவாக்கி-பிளமிங் (109 ரன், 53 பந்து, 11 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தனர்.பின் களமிறங்கிய சீன அணி 16.5 ஓவரில் 78 ரன்னுக்கு சுருண்டு 180 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சாதனை ஜோடி
இதன்மூலம் ஜப்பான் துவக்க ஜோடி, சர்வதேச 'டி-20' போட்டியில் எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன் சேர்த்த ஜோடியானது. இதற்கு முன் 2019ல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் முதல் விக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தானின் உஸ்மான் கானி, ஹஜ்ரதுல்லா ஜஜாய் ஜோடி 236 ரன் சேர்த்தது சாதனையாக இருந்தது.