உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பெங்களூருவை வென்றது கோல்கட்டா: கோலி விளாசல் வீண்

பெங்களூருவை வென்றது கோல்கட்டா: கோலி விளாசல் வீண்

பெங்களூரு: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு வீரர் விராத் கோலியின் விளாசல் வீணானது.இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் பெங்களூரு, கோல்கட்டா அணிகள் மோதின.

கோலி அபாரம்

பெங்களூரு அணிக்கு கேப்டன் டுபிளசி (8) ஏமாற்றினார். மறுமுனையில் அசத்திய விராத் கோலி, ஸ்டார்க் வீசிய 3வது ஓவரில் வரிசையாக ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடிக்க 17 ரன் கிடைத்தது. ஸ்டார்க், ஹர்ஷித் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த கிரீன், சுனில் நரைன் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 65 ரன் சேர்த்த போது ரசல் 'வேகத்தில்' கிரீன் (33) போல்டானார்.வருண் சக்கரவர்த்தி பந்தை சிக்சருக்கு அனுப்பிய கோலி, 36 பந்தில் அரைசதம் எட்டினார். மேக்ஸ்வெல் (28) ஓரளவு கைகொடுத்தார். ரஜத் படிதர் (3), அனுஜ் ரவாத் (3) சோபிக்கவில்லை. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக், ரசல் வீசிய 19வது ஓவரில் 2 சிக்சர் பறக்கவிட்டார். கார்த்திக் (20) 'ரன்-அவுட்' ஆனார். பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன் எடுத்தது. கோலி (83) அவுட்டாகாமல் இருந்தார்.

சூப்பர் துவக்கம்

சவாலான இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு பில் சால்ட், சுனில் நரைன் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. கோல்கட்டா அணி 21 பந்தில் 50 ரன்னை எட்டியது. முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது மயங்க் தாகர் பந்தில் நரைன் (47) போல்டானார். சால்ட் (30) நம்பிக்கை தந்தார். அல்ஜாரி ஜோசப் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த வெங்கடேஷ் ஐயர், 29 பந்தில் அரைசதம் எட்டினார். யாஷ் தயால் பந்தில் வெங்கடேஷ் (50) அவுட்டானார்.பொறுப்பாக ஆடிய கேப்டன் ஸ்ரேயாஸ், மயங்க் தாகர் பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். கோல்கட்டா அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 186 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்ரேயாஸ் (39), ரிங்கு சிங் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

500 போட்டி

கோல்கட்டாவின் சுனில் நரைன், ஒட்டுமொத்த 'டி-20' அரங்கில் 500 போட்டிகளில் விளையாடிய 4வது வீரரானார். ஏற்கனவே வெஸ்ட் இண்டீசின் போலார்டு (660 போட்டி), டுவைன் பிராவோ (573), பாகிஸ்தானின் சோயப் மாலிக் (542) இம்மைல்கல்லை கடந்தனர்.

240 சிக்சர்

ஐ.பி.எல்., அரங்கில் பெங்களூருவுக்காக அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் கெய்லை (239) முந்தி முதலிடம் பிடித்தார் கோலி(241 சிக்சர்).* ஐ.பி.எல்., தொடரில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலில் தோனியை (239) முந்தி 4வது இடம் பிடித்தார் கோலி.

1500 சிக்சர்

சுனில் நரைன் பந்தை (7.5 ஓவர்) கோலி சிக்சருக்கு அனுப்பினார். இது, ஐ.பி.எல்., வரலாற்றில் பெங்களூரு சார்பில் பதிவான 1500வது சிக்சரானது. மும்பை சார்பில் அதிகபட்சமாக 1575 சிக்சர் அடிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை