தர்மசாலா: ரவிந்திர ஜடேஜா 'ஆல்-ரவுண்டராக' அசத்த, சென்னை அணி 28 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஹிமாச்சலில் உள்ள தர்மசாலா மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின.
பதிரானா காயம்
'டாஸ்' வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கர்ரான் 'பவுலிங்' தேர்வு செய்தார். தொடைப்பகுதியில் காயம் அடைந்த சென்னை அணியின் பதிரானா, சிகிச்சைக்காக இலங்கை திரும்பினார்.சென்னை அணிக்கு ரகானே(9) ஏமாற்றினார். ஹர்பிரீத் பிரார் ஓவரில் கேப்டன் ருதுராஜ் ஒரு சிக்சர், 2 பவுண்டரி விளாசினார். ராகுல் சகார் ஓவரில் ருதுராஜ் (32), துபே (0) சிக்கினர். டேரில் மிட்சல், 30 ரன் எடுத்தார். மொயீன் அலி (17) விரைவில் வெளியேற, 13 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 103 ரன் எடுத்து தவித்தது.
தோனி 'ஷாக்'
தனிநபராக போராடிய ரவிந்திர ஜடேஜா அவ்வப்போது சிக்சர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார். கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் (17) கைகொடுத்தார். ஹர்ஷல் படேல் ஓவரில், சந்தித்த முதல் பந்திலேயே தோனி (0) போல்டாக, ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அர்ஷ்தீப் 'வேகத்தில்' ஜடேஜா (43) அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது.
விக்கெட் மடமட
சுலப இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி, சென்னை பந்துவீச்சில் அதிர்ந்தது. துஷார் தேஷ்பாண்டே ஓவரில் பேர்ஸ்டோவ் (7), ரூசோவ் (0) நடையை கட்டினர். சஷாங் சிங் 27 ரன் எடுத்தார். ஜடேஜா 'சுழலில்' பிரப்சிம்ரன் (30), சாம் கர்ரான் (7), அஷுதோஷ் (3) சிக்கினர். சிமர்ஜீத் பந்தில் ஜிதேஷ் சர்மா (0) வெளியேறினார். ராகுல் சகார் 16 ரன் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 139 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.