உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்திய அணியில் ரியான் பராக்: இர்பான் பதான் கணிப்பு

இந்திய அணியில் ரியான் பராக்: இர்பான் பதான் கணிப்பு

ஜெயப்பூர்: ஐ.பி.எல்., தொடரில் பட்டையை கிளப்புகிறார் இளம் ரியான் பராக். விரைவில் இந்திய அணியில் இடம் பிடிக்க காத்திருக்கிறார்.ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி, டில்லியை வீழ்த்தியது. இதில் ராஜஸ்தான் அணிக்காக அசத்தினார் ரியான் பராக். முன்பு 'பினிஷராக' வந்த இவர், நேற்று முன்தினம் நான்காவது இடத்தில் களமிறக்கப்பட்டார். அதிரடியாக ஆடி அரைசதம் கடந்தார். நார்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 25 ரன்(4,4,6,4,6,1) எடுத்தார். 45 பந்தில் 84 ரன்(7 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசி, ஆட்ட நாயகனாக ஜொலித்தார்.

உள்ளூரில் ரன் மழை

அசாமை சேர்ந்த பராக், 22, உள்ளூர் போட்டியில் ரன் மழை பொழிந்தார். 2023ல் டியோதர் டிராபியில் அதிக ரன்(354), அதிக சிக்சர்(23) விளாசினார். சயது முஷ்டாக் அலி டிராபி தொடரில் 510 ரன்(ஸ்டிரைக் ரேட் 182.79) குவித்தார். ரஞ்சி கோப்பையில் 378 ரன் எடுத்தார். இதே 'பார்மில்' ஐ.பி.எல்., தொடரில் களமிறங்கினார். டில்லிக்கு எதிரான போட்டிக்கு முன் காய்ச்சலால் அவதிப்பட்டார். பயிற்சியின் போது பந்தை அடிக்கவே சிரமப்பட்டார். விரைவில் தேறிய இவர், அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.

விமர்சனத்துக்கு பதிலடி

இது குறித்து பராக் கூறுகையில்,''காய்ச்சல் காரணமாக மூன்று நாள் எழுந்திருக்க கூட முடியவில்லை. வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக் கொண்டு டில்லிக்கு எதிரான போட்டியில் களமிறங்கினேன். 84 ரன் விளாசியதில் மகிழ்ச்சி. அரங்கில் இருந்து என் ஆட்டத்தை தாயார் பார்த்தார். அவருக்கு கடந்த 3-4 ஆண்டுகள் நான் பட்ட கஷ்டம் தெரியும். 20 ஓவர் நின்று விளையாடியதால், பதட்டம் தணிந்தது. என் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தேன். உள்ளூர் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டது, ஐ.பி.எல்., போட்டியில் சாதிக்க உதவியது,'' என்றார்.ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில்,''சமீப காலமாக ரியான் பராக் பெயர் தான் அதிகம் உச்சரிக்கப்படுகிறது. இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுக்க காத்திருக்கிறார்,''என்றார்.

பதான் கணிப்பு

இந்திய அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' இர்பான் பதான் கூறுகையில்,''உள்ளூர் போட்டிகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் தொடர்களில் அசத்திய பராக், தற்போது ஐ.பி.எல்., அரங்கில் ஜொலிக்கிறார். இன்னும் இரு ஆண்டுகளில் இந்திய அணிக்காக விளையாடுவார்,''என்றார்.

ரியான் பராக் '2.0'

இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ் கூறுகையில்,''பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் ரியான் பராக்கை ஒருமுறை சந்தித்தேன். சிறிய காயத்தில் இருந்து தேறுவதற்கான பயிற்சிகளில் கவனம் செலுத்தினார். அங்கிருந்த பயிற்சியாளர் ஒருவரிடம்,'இந்த வீரர் திறமையானவராக உள்ளார். ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் தெரிகிறது,'' என்றேன். தற்போது 'ரியான் பராக் 2.0' ஆக அவதாரம் எடுத்துள்ளார்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை