போட்செப்ஸ்ட்ரூம்: பெண்கள் கிரிக்கெட்டில் 300 ரன்னுக்கும் மேல் 'சேஸ்' செய்து வெற்றி பெற்ற முதல் அணியானது இலங்கை. தென் ஆப்ரிக்கா, இலங்கை பெண்கள் அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி போட்செப்ஸ்ட்ரூமில் (தெ.ஆப்.,) நடந்தது. முதலில் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு கேப்டன் லாரா (184 ரன்*, 147 பந்து), மரிஜான்னே (36) கைகொடுக்க, 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 301 ரன் குவித்தது. இலங்கை அணிக்கு விஷ்மி (26), கேப்டன் சமாரி அத்தபத்து ஜோடி நல்ல துவக்கம் தந்தது. ஒரு கட்டத்தில் இலங்கை 126/4 ரன் என திணறியது. பின் சமாரி, நிலாக்சிகா இணைந்து வேகமாக ரன் சேர்க்க, இலங்கை அணி 44.3 ஓவரில் 305/4 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வெற்றி பெற்றது. சமாரி (195 ரன், 139 பந்து), நிலாக்சிகா (50) அவுட்டாகாமல் இருந்தனர். ஒருநாள் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.புதிய சாதனைஇதையடுத்து பெண்கள் கிரிக்கெட்டில் 300 ரன்னுக்கும் மேல் 'சேஸ்' செய்து வெற்றி பெற்ற முதல் அணியானது இலங்கை. முன்னதாக 2012ல் ஆஸ்திரேலிய அணி 289/6 ரன் (எதிர்-நியூசி., 288/6) எடுத்து வெற்றி பெற்றிருந்தது. ஆண்கள் கிரிக்கெட்டில் 1992ல் ஜிம்பாப்வேயை (312/4) வென்ற இலங்கை அணி (313/7), 300 ரன்னுக்கும் மேல் 'சேஸ்' செய்து வென்ற முதல் அணியானது. முதல் இடம்ஒருநாள் அரங்கில் 'சேஸ்' செய்த போட்டிகளில் அதிக ரன் எடுத்த வீராங்கனை ஆனார் சமாரி (195). மெக் லானிங் (152, ஆஸி.,) 2வதாக உள்ளார்.* ஒட்டுமொத்த ஒருநாள் கிரிக்கெட்டில் 'சேஸ்' செய்த போது அதிக ரன் எடுத்தவர்களில் சமாரி இரண்டாவது இடம் பெற்றார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல் (201, எதிர்-ஆப்கன், 2023) உள்ளார். * பெண்கள் ஒருநாள் அரங்கில் சமாரி எடுத்த 195 ரன், மூன்றாவது சிறந்த ஸ்கோராக அமைந்தது. முதல் இரு இடத்தில் அமேலியா (232, நியூசி.,), பெலிண்டா (229, ஆஸி.,) உள்ளனர்.