ஐதராபாத், ஜன.28-முதலாவது டெஸ்டில் சதம் விளாசிய போப், இங்கிலாந்து அணிக்கு நம்பிக்கை தந்தார். இன்று பவுலர்கள் மிரட்டினால், இந்தியா வெற்றியை ருசிக்கலாம்.இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. ஐதராபாத்தில் முதல் டெஸ்ட் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன் எடுத்தது. 2வது நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 421 ரன் எடுத்திருந்தது. ஜடேஜா பரிதாபம்
நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. 8வது விக்கெட்டுக்கு ஜடேஜா, அக்சர் 78 ரன் சேர்த்த நிலையில், ஜோ ரூட் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது வலையில் ஜடேஜா(87) எல்.பி.டபிள்யு., ஆனார். இதை எதிர்த்து 'ரிவியு' கேட்டும் பலன் கிடைக்கவில்லை. அக்சர் 44 ரன் எடுத்தார். இந்திய அணி முதல் இன்னிங்சில் 436 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 190 ரன் முன்னிலை பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 4 விக்கெட் வீழ்த்தினார்.பின் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் விக்கெட்டுகள் விரைவாக சரிந்தன. கிராலே(31), டக்கெட்(47) நிலைக்கவில்லை. டெஸ்டில் 7வது முறையாக ஜோ ரூட்(2) விக்கெட்டை கைப்பற்றினார் பும்ரா. சிறிது நேரத்தில் ஜடேஜாவின் மந்திர பந்தில் பேர்ஸ்டோவ்(10) போல்டானார். அஷ்வின் 12வது முறை
அஷ்வின் 'சுழலில்' மீண்டும் சிக்கினார் கேப்டன் ஸ்டோக்ஸ்(6). டெஸ்ட் அரங்கில் இவரது விக்கெட்டை 12வது முறையாக வீழ்த்தினார் அஷ்வின். அப்போது இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்து தத்தளித்தது.பின் போப், போக்ஸ் சேர்ந்து துணிச்சலாக போராடினர். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளித்த போப், தனது ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப் 'ஷாட்' மூலம் நம்பிக்கை(ஹோப்) தந்தார். டெஸ்டில் தனது 5வது சதம் எட்டினார். போக்ஸ் 34 ரன் எடுத்தார்.மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 6 விக்கெட்டுக்கு 316 ரன் எடுத்திருந்தது. 126 ரன் முன்னிலை பெற்றுள்ளது. போப்(148), ரேகன் அகமது(16) அவுட்டாகாமல் இருந்தனர்.இன்று போப், நின்று விளையாடினால் சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து எஞ்சிய விக்கெட்டுகளை நமது பவுலர்கள் விரைவாக வீழ்த்த வேண்டும். அப்போது தான் இந்தியா எட்டக் கூடிய இலக்கை விரட்டி வெற்றியை வசப்படுத்த முடியும்.