| ADDED : ஜூலை 15, 2024 11:16 PM
கோவை: மதுரை, நெல்லை அணிகள் மோதிய டி.என்.பி.எல்., லீக் போட்டி மழையால் பாதியில் ரத்தானது.டி.என்.பி.எல்., எட்டாவது சீசன் நடக்கிறது. கோவை, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் மதுரை, நெல்லை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மதுரை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. மழையால் தலா 17 ஓவர் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டது.நெல்லை அணிக்கு கேப்டன் அருண் கார்த்திக், மோகித் ஹரிஹரன் ஜோடி துவக்கம் தந்தது. குர்ஜப்னீத் சிங் வீசிய முதல் ஓவரில் ஹரிஹரன் 'டக்-அவுட்' ஆனார். நெல்லை அணி 3.5 ஓவரில் 19/1 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட போட்டி நிறுத்திவைக்கப்பட்டது.மழை நின்ற பின் தலா 15 ஓவர் போட்டியாக தொடர்ந்தது. குர்ஜப்னீத் பந்தில் அஜிதேஷ் (12) அவுட்டானார். பொறுப்பாக ஆடிய கேப்டன் அருண் கார்த்திக், அலெக்சாண்டர் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். நெல்லை அணி 5.2 ஓவரில் 33/2 ரன் எடுத்திருந்த போது மீண்டும் மழை குறுக்கிட, போட்டி பாதியில் ரத்தானது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.