| ADDED : ஆக 05, 2024 10:32 PM
துபாய்: ஐ.சி.சி., சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வாஷிங்டன் சுந்தர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படும். ஜூலை மாதத்திற்காக சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியல் வெளியானது. இதில் தமிழக 'ஆல்-ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளார். ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் 'சுழலில்' அசத்திய இவர் 8 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் தொடர் நாயகன் விருதை தட்டிச் சென்றார். பல்லேகெலேயில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது 'டி-20' போட்டி 'டை' ஆனது. இதில் 'சூப்பர் ஓவரில்' அசத்திய இவர், ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.இப்பட்டியலில் இங்கிலாந்தின் அட்கின்சன், ஸ்காட்லாந்தின் சார்லி கேசல் இடம் பெற்றுள்ளனர்.சிறந்த வீராங்கனைக்கான பரிந்துரைப்பட்டியலில் ஆசிய கோப்பையில் அசத்திய இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா (173 ரன்), ஷபாலி வர்மா (200 ரன்), இலங்கை கேப்டன் சமாரி (304 ரன்) இடம் பிடித்துள்ளனர்.