புதுடில்லி: பெண்கள் பிரிமியர் லீக் வீராங்கனைகள் ஏலத்தில் இந்தியாவின் தீப்தி சர்மா, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி உள்ளிட்டோர் அதிக விலைக்கு ஒப்பந்தமாகலாம்.இந்தியாவில், அடுத்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக் ('டி-20') 4வது சீசன் நடக்கவுள்ளது. 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி, பெங்களூரு, குஜராத், உ.பி., என 5 அணிகள் பங்கேற்கின்றன.இத்தொடருக்கான வீராங்கனைகள் 'மெகா' ஏலம் டில்லியில் இன்று நடக்கிறது. இதில் 194 இந்திய வீராங்கனைகள், 83 வெளிநாட்டு வீராங்கனைகள் என, மொத்தம் 277 பேர் ஏலத்தில் வரவுள்ளனர். இப்பட்டியலில் இருந்து 73 பேர் (50 இந்திய வீராங்கனைகள், 23 வெளிநாட்டு வீராங்கனைகள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த ஏலத்தில் உ.பி., அணி அதிகபட்சமாக ரூ. 14.5 கோடிக்கு வீராங்கனைகளை ஒப்பந்தம் செய்யலாம். டில்லி அணி, ரூ. 5.70 கோடிக்கு மட்டுமே வாங்க முடியும். தலா 5 வீராங்கனைகளை தக்கவைத்துக் கொண்ட மும்பை, டில்லி அணிக்கு 'ரைட் டூ மேட்ச்' அனுமதி கிடையாது.சமீபத்தில் உலக கோப்பை (50 ஓவர்) வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்த இந்தியாவின் தீப்தி சர்மா, ரேணுகா சிங், ஸ்ரீ சரணி, கிராந்தி ஆகியோரை வாங்க போட்டி நிலவலாம். உலக கோப்பையில் தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மா, கடந்த சீசனில் உ.பி., அணிக்காக விளையாடினார். இவர் அதிக விலைக்கு ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வெளிநாட்டு வீராங்கனைகளான நியூசிலாந்தின் சோபி டெவின், அமேலியா கெர், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டோன், ஆஸ்திரேலியாவின் அலிசா ஹீலி, மேக் லானிங், தென் ஆப்ரிக்க கேப்டன் லாரா வால்வோர்ட் ஆகியோரை வாங்க கடுமையான போட்டி ஏற்படலாம்.