உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / வில்வித்தை: வெளியேறியது இந்தியா

வில்வித்தை: வெளியேறியது இந்தியா

பாரிஸ்: ஒலிம்பிக் வில்வித்தையில் இந்திய பெண்கள் அணி காலிறுதியில் தோற்று வெளியேறியது.பாரிஸ் ஒலிம்பிக்கில் நேற்று பெண்கள் அணிகளுக்கான வில்வித்தை போட்டி நடந்தது. இதன் தகுதிச்சுற்றில் இந்தியாவின் அன்கிதா, பஜன் கவுர், தீபிகா குமாரி இடம் பெற்ற அணி 4வது இடம் (மொத்தம் 12 அணி) பிடித்து, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது. நேற்று நடந்த காலிறுதியில் இந்திய அணி, நெதர்லாந்தின் கேபி ஸ்காலசர், லாரா, குயின்டி இடம் பெற்ற அணியை எதிர்கொண்டது.ஒலிம்பிக் வரலாற்றில் கடந்த 1988 சியோல் போட்டி முதல் வில்வித்தை போட்டி நடக்கிறது. இதுவரை இந்தியா ஒருமுறை கூட காலிறுதி போட்டியை தாண்டியது இல்லை.இம்முறை இந்தியா சாதிக்கும் என பெரிதும் நம்பப்பட்ட நிலையில் துவக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. முதல் செட்டை இந்தியா 51-52 என கோட்டை விட 0-2 என பின்தங்கியது.நான்காவது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்கும் 'சீனியர்' வீராங்கனை தீபிகா குமாரி, தொடர்ந்து 6, 7 என குறைவான புள்ளி எடுக்க, இரண்டாவது செட்டையும் இழந்த இந்தியா (49-54), 0-4 என்ற நிலைக்கு சென்றது.மூன்றாவது செட்டை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியாவுக்கு, முதல் வாய்ப்பில் அன்கிதா, 4 புள்ளி எடுக்க, தோல்வி உறுதியானது.இம்முறை 48-53 என கோட்டை விட்டது. முடிவில் இந்திய அணி 0-6 என்ற செட்டில் தோல்வியடைந்தது. மீண்டும் காலிறுதியுடன் வெளியேறியது. ஆண்கள் நம்பிக்கைஇன்று ஆண்கள் அணிகளுக்கான வில்வித்தையில் இந்தியா சார்பில் திராஜ் பொம்மதேவரா, தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் இடம் பெற்ற அணி களமிறங்குகிறது. தகுதிச்சுற்றில் மூன்றாவது இடம் பெற்ற இந்தியா, இன்று சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்ல வேண்டும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை