| ADDED : ஆக 06, 2024 10:09 PM
பாரிஸ்: டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிக்கான போட்டியில் இந்தியா, 0-3 என சீனாவிடம் தோல்வியடைந்தது.ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் தற்போது அணிகளுக்கான போட்டி நடக்கின்றன. இந்திய ஆண்கள் அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வலிமையான சீனாவை சந்தித்தது.முதலில் நடந்த இரட்டையர் போட்டியில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய், மானவ் விகாஷ் ஜோடி, சீனாவின் லாங், சுகுன் ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 0-3 (2-11, 3-11, 7-11) என தோற்றது. அடுத்து ஒற்றையர் போட்டியில் இந்திய அணியின் 'சீனியர்' வீரர் அஜந்தா சரத்கமல், ஜென்டாங் பனை எதிர்கொண்டார்.முதல் செட்டை 11-9 என கைப்பற்றி ஆறுதல் தந்த சரத்கமல், அடுத்தடுத்த செட்டுகளில் (7-11, 7-11, 5-11) ஏமாற்றினார். முடிவில் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.இரண்டாவது ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் மானவ் விகாஷ், 3-0 (9-11, 6-11, 9-11) என்ற கணக்கில் சீன வீரர் சுகுன் வாங்கிடம் வீழ்ந்தார். முடிவில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெளியேறியது.