| ADDED : ஜூலை 31, 2024 11:22 PM
சாட்டியாரக்ஸ்: துப்பாக்கிசுடுதலில் 'ரைபிள் 3 பொசிசன்ஸ்' பிரிவில் இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே பைனலுக்கு முன்னேறினார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் நடக்கிறது. இதில் துப்பாக்கிசுடுதல் போட்டி சாட்டியாரக்ஸ் என்ற இடத்தில் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 'ரைபிள் 3 பொசிசன்ஸ்' பிரிவு தகுதிச்சுற்று போட்டி நடந்தன. இந்தியா சார்பில் ஸ்வப்னில் குசாலே, ஐஸ்வரி பிரதாப் சிங் களமிறங்கினர்.மூன்று நிலைகளில் போட்டி நடந்தன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 20 வாய்ப்பு தரப்பட்டன.முழங்கால் இட்டு அமர்ந்தபடி நடந்த போட்டியில் ஸ்வப்னில் 198 புள்ளி (99, 99) எடுத்தார். அடுத்து புரோன் (படுத்துக் கொண்டு சுடுதல்) பிரிவில் 197 (98, 99), நின்று கொண்டு சுடுதல் பிரிவில் 195 (98, 97) என ஸ்வப்னில் மொத்தம் 590 புள்ளி எடுத்து, 7வது இடம் பிடித்தார். ஐஸ்வரி பிரதாப், 199, 193, 198 என மொத்தம் 589 புள்ளி எடுத்து, 11வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.தகுதிச்சுற்றில் 'டாப்-8' இடம் பிடித்தால் மட்டுமே பைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில், ஸ்வப்னில் பைனலுக்குள் (இன்று) நுழைந்தார். ஐஸ்வரி பிரதாப் வெளியேறினார்.பெண்கள் ஏமாற்றம்பெண்களுக்கான துப்பாக்கிசுடுதல் 'டிராப்' பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் ராஜேஸ்வரி, ஸ்ரேயாசி பங்கேற்றனர். முதல் நாள் முடிவில் இருவரும் தலா 68 புள்ளி எடுத்து, 21, 22வது இடத்தில் இருந்தனர். நேற்று இரண்டாவது நாள் தகுதிச்சுற்று நடந்தது. இருவரும் மீண்டும் ஏமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.இதையடுத்து ராஜேஸ்வரி (113 புள்ளி) 22வது, ஸ்ரேயாசி (113) 23வது இடத்துக்கு தள்ளப்பட்டு, பைனல் வாய்ப்பை இழந்து வெளியேறினர்.