| ADDED : மார் 08, 2024 07:03 PM
துபாய்: பாரா வில்வித்தையில் இந்தியாவின் ராகேஷ் தங்கம் கைப்பற்றினார். துபாயில் பாரா வில்வித்தை உலக தரவரிசை தொடர் நடந்தது. ஆண்கள் தனிநபர் காம்பவுண்டு பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-2' வீரர் இந்தியாவின் ராகேஷ் குமார், இந்தோனேஷியாவின் கென் ஸ்வாகுமிலாங்கை சந்தித்தார். துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்ட ராகேஷ், 5 சுற்று முடிவில் 147-143 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். காம்பவுண்டு கலப்பு இரட்டையர் பிரிவில் ராகேஷ், ஷீத்தல் தேவி களமிறங்கினார். வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய ஜோடி 155-152 என தென் கொரிய ஜோடியை சாய்த்தது. பெண்களுக்கான ரீகர்வ், தனிநபர் பிரிவு பைனலில் இந்தியாவின் பூஜா, உலகின் 'நம்பர்-4' வீராங்கனை இத்தாலியின் எலிசபெட்டா மிஜ்னோவை சந்தித்தார். இதில் 0-6 என தோற்ற பூஜாவுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இத்தொடரில் இந்தியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என 3 பதக்கம் வென்றது.