| ADDED : ஜூன் 13, 2024 11:03 PM
காந்திநகர்: ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் திவ்யா கோப்பை வென்றார்.குஜராத்தில் ஜூனியர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. பெண்களுக்கான பிரிவில் 101 பேர் பங்கேற்றனர். நேற்று 11வது, கடைசி சுற்று போட்டி நடந்தன. முதல் 10 சுற்றில் 9.0 புள்ளி பெற்றிருந்த இந்தியாவின் திவ்யா தேஷ்முக், பல்கேரியாவின் பெலோஸ்லாவாவை சந்தித்தார்.இதில் வென்றால் சாம்பியன் ஆகலாம் என்ற நிலையில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார் திவ்யா. துவக்கத்தில் இருந்து சிறப்பாக செயல்பட்டார் திவ்யா. முடிவில் 57 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.மற்ற போட்டிகளில் இந்தியாவின் ரிந்தியா, திரிஷா, கிருத்திகா, ஆஷிதா உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர். 11 சுற்று முடிவில் இந்தியாவின் திவ்யா, 9 வெற்றி, 2 'டிரா'வுடன் 10 புள்ளி எடுத்து, முதலிடம் பெற்று, ஜூனியர் செஸ் உலக சாம்பியன் ஆனார். ஆர்மேனியாவின் மரியம் (9.5), அஜர்பெய்ஜானின் அலாவெர்டியேவா (8.5) அடுத்த இரு இடம் பெற்றனர். இந்திய வீராங்கனைகள் சுபி (8.0), ரக்சித்தா (7.5) 4, 5வது இடம் பிடித்தனர்.