| ADDED : ஆக 22, 2024 12:43 AM
செய்யூர்:மாமல்லபுரம்- - புதுச்சேரி இடையிலான கிழக்கு கடற்கரை சாலையை, நான்கு வழியாக விரிவாக்கம் செய்யும் பணி, செய்யூர் பகுதியில் நடந்து வருகிறது.சாலை தாழ்வாக உள்ள பகுதிகள், பாலங்கள் அமையும் இடங்களில், பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஏரிகளில், அரசு அனுமதியுடன் மண் எடுத்து வரப்பட்டு, சாலை உயர்த்தி அமைக்கப்பட்டு வருகிறது.செய்யூர் அடுத்த நல்லுார் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து மண் எடுக்கும் பணி, கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது.ஏரியில் இருந்து மண் எடுத்துச் செல்லும் லாரிகள், அதிக பாரம் ஏற்றிக்கொண்டு, தார்ப்பாய் மூடாமல் வேகமாக செல்வதால், லாரியில் இருந்து சிதறும் ஏரி மண் சாலையில் குவிந்து காணப்படுகிறது.சாலையில் பரவிக்கிடக்கும் மண் காற்றில் பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் கண்களை பதம்பார்க்கின்றன. இதனால் அவதிப்படும் வாகன ஓட்டிகள் குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் விளைவாக, செய்யூர் வட்டாட்சியர் சரவணன், செய்யூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு, தார்ப்பாய் மூடாமல் சென்ற, இரண்டு லாரிகள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற ஒரு லாரியை மடக்கி, செய்யூர் போலீசாரிடம் ஒப்படைத்தார். பின், போலீசார் மூன்று லாரிகளுக்கும் சேர்த்து, 20,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.