செங்கல்பட்டு:செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், தேசிய மக்கள் நீதிமன்றத்தில், 3,273 வழக்குகளுக்கு, நேற்று தீர்வு காணப்பட்டது.செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதுார், உத்திரமேரூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், ஆலந்துார், ஆகிய இடங்களில் நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் தேங்கியுள்ள மற்றும் பதிவு செய்யப்படாத வழக்குகளை சமரசமாக முடிக்க, தேசிய மக்கள் நீதிமன்றம் முடிவெடுத்தது. இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு மாற்றுமுறை தீர்வு மைய வளாகத்தில், மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா அறிவுறுத்தலின்படி, தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. இதில், மக்கள் நீதிமன்ற வழக்குகள், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் மோகனகுமாரி, தலைமை குற்றவியல் நீதிபதி ஜெயஸ்ரீ, கூடுதல் சார்பு நீதிபதி தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நீதிபதிகள் முன்னிலையில், வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. மாவட்டத்தில், அனைத்து நீதிமன்றங்களில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில், குடும்ப நல வழக்குகள், குற்ற வழக்குகள் மற்றும் வங்கி வழக்குகள் என, 8,592 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது. இதில், 3,273 வழக்கில், 24 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரத்து 143 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.