சென்னை: கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு 240 ஏக்கர் பரப்பு உடையது. இங்கு 23,704 வீடுகள் உள்ளன. மொத்தம் 1 லட்சம் பேருக்கு மேல் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் துாய்மை பணி, தினக்கூலி, தனியார் அலுவலகம் வீடுகளில் கடைநிலை ஊழியர்களாக பணிபுரிகின்றனர். குறிப்பிட்ட தெருக்களில் அயனாவரம், சூளைமேடு, ரிசர்வ் வங்கி, புதுப்பேட்டை, எழும்பூர், இந்திராநகர் பகுதியில் இருந்து இங்கு, மறுகுடியமர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள், தனி தனி கோஷ்டிகளாக இருப்பதால், மோதல் அதிகரித்து வருகிறது. அதேபோல் பலர் கஞ்சா, போதை மாத்திரை, சட்ட விரோத மது விற்பனை செய்கின்றனர்.இங்குள்ள 'புள்ளிங்கோ' கெட்டப்பில் பல சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் படிப்பு, வேலைக்கு செல்லாமல் சுற்றுகின்றனர்.இவர்களில், 12 முதல் 18 வயதுள்ள, 70 சதவீதம் பேர் கஞ்சா, போதை மாத்திரைக்கு அடிமையாகி உள்ளனர். பணத்திற்கு வழிப்பறி, திருட்டில் ஈடுபடுகின்றனர்.இவ்வாறு கடந்த ஓராண்டில் கஞ்சா, போதை மாத்திரை, மது விற்றதில், 97 பேர் ஆண்கள், 34 பேர் பெண்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், 16 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம்.மொத்தம் 51 கிலோ கஞ்சா, 3,170 போதை மாத்திரை, 255 லிட்டர் மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. கைது நடவடிக்கை தொடர்ந்தும், குறிப்பிட்ட நபர்களால் சங்கிலி தொடர் போல் விற்பனை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க முடியாமல், போலீசார் திணறுகின்றனர்.
தடுப்பு நடவடிக்கையில் தொய்வு!
கண்ணகி நகர், செம்மஞ்சேரி குடியிருப்பு 3 அடுக்கு வரை உடையது. இங்குள்ள 210 பிளாக்குகளில், 25,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. ஒரு பிளாக்கில், 94, 198 என்ற அடிப்படையில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு, சில பிளாக்குகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்பனை அதிகளவில் நடக்கிறது. எட்டாவது மாடியில் ஒரு வீட்டில் விற்பனை நடந்தால், போலீசார் செல்வதற்குள் தகவல் தெரிந்து தப்பி செல்கின்றனர். தகவல் கூற, சிறுவர்கள், இளம் பெண்கள், வயதானவர்களை போதை வியாபாரிகள் பயன்படுத்துகின்றனர். இதை மீறி தான் கைது, தடுப்பு நடவடிக்கை எடுக்கிறோம் என, போலீசார் கூறினர்.