மாமல்லபுரம் : மாமல்லபுரம் கடலரிப்பை தடுக்க, கல் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜிடம் மீனவர்கள் முறையிட்டனர்.மாமல்லபுரம் மீனவர் பகுதி கடற்கரையில், ஆண்டின் மத்திய மாதங்களில், கடலரிப்பு அதிகரித்து, கடற்கரை அழிகிறது. பின், கடல் உள்வாங்கி, மீண்டும் கடற்கரை உருவாகிறது.கடலரிப்பு காலத்தில், மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் ஆகியவற்றை, பாதுகாப்பாக வைக்க இடமின்றி மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.தற்போதும் கடலரிப்பு ஏற்பட்டு, கடல்நீர் நிலப்பகுதியில் புகுந்துள்ளது. மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி, அவர்களை நேற்று சந்தித்து, பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.இங்கு கடலரிப்பை தடுத்து பாதுகாக்க, கல் தடுப்பு அமைக்கவும், படகுகளை பாதுகாப்பாக வைக்க, தற்காலிக இடம் ஒதுக்கவும் வலியுறுத்தினர்.மாமல்லபுரம் கடல்பகுதியில் ஏற்படும் மண் அரிப்பைத் தடுப்பது குறித்து அரசிடம் பரிந்துரைப்பதாக, அவர் உறுதியளித்தார்.மேலும், கடற்கரை கோவில் அருகில் உள்ள மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழும இடத்தில், படகுகள் வைக்க முறையிட்டு, அப்பகுதியை ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார்.