கூடுவாஞ்சேரி:நந்திவரம் நந்தீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோவிலுக்கு எதிரில், 16 ஏக்கர் கோவிலுக்கு சொந்தமான நிலம் உள்ளது.கோவில் வளாகத்தின் அருகில், சில நாட்களுக்குமுன், ஹிந்து அறநிலையத் துறை சார்பில், கடைகள் கட்டுவதற்கு 'டெண்டர்' கோரப்பட்டு, பணிகள் கடந்த மார்ச் மாதம் துவங்கியது. அதில், 10 கடைகள் கட்டுவதற்கு, 1.12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.கடந்த மார்ச் மாதம் 18ம் தேதி, கோவில் வளாகம் எதிரில் கடைகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் போராட்டம் செய்தனர்.இந்த இடத்தில், பாரம்பரிய முறைப்படி, பல தலைமுறைகளாக கோவில் திருவிழாக்கள், பொங்கல் விழா, மாடுபிடி திருவிழா, ஆடிமாத திருவிழா என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருவதாகவும், கடைகள் கட்டினால், நிகழ்ச்சிகள் நடத்த இடையூறு ஏற்படும் எனவும், போராட்டத்தின் போது பக்தர்கள் வலியுறுத்தினர்.அப்போது அங்கு வருகை தந்த ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் கூடுவாஞ்சேரி போலீசார், இது தொடர்பாக புகார் அளிக்கும்படி, பக்தர்களிடம் தெரிவித்தனர்.அதைத் தொடர்ந்து, ஊர் பொதுமக்கள் மற்றும் இந்து முன்னணி சார்பில், காவல் நிலையத்திலும், கலெக்டருக்கும் புகார் மனு அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, கடைகள் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.ஆனால், நேற்று மீண்டும் கடைகள் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டன. இதையறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணி, பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர், கோவில் வளாகத்தில் திரண்டனர்.இந்து முன்னணி மாநில பொதுச்செயலர் பரமேஸ்வரன் கூறியதாவது:கோவில்களில் நடந்து வரும் பாரம்பரிய பூஜை முறைகளை வேரோடு அறுக்க வேண்டும் என, இந்த அரசு செயல்படுகிறது.வணிக வளாகங்கள் கட்டுவதற்கு, நந்திவரம் பகுதியில் பல இடங்கள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமான, பாரம்பரிய விழாக்கள் நடைபெற்று வரும் இந்த இடத்தில் கட்டடம் கட்ட வேண்டியதன் அவசியம் என்ன.இதுகுறித்து, நாங்கள் காவல் நிலையத்திலும், கலெக்டரிடமும் புகார் மனு அளித்து, விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, மீண்டும் கட்டடப் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதை, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இது தொடர்பாக, கோர்ட்டில் வழக்கு தொடரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.