| ADDED : மே 19, 2024 01:37 AM
மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் பாரத் பெட்ரோல் பங்கில் இருந்து இருசக்கர வாகனத்தை திருடி சென்ற நபர்களை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேல்மருவத்துார் சக்தி ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 42. இவர், கடந்த இரு தினங்களுக்கு முன், அதிகாலை நேரத்தில் மேல்மருவத்துார் பாரத் பெட்ரோல் பங்கில், தன் உறவினரின் லாரிக்கு டீசல் நிரப்புவதற்காக, 'யமஹா எப்இசட்' இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார்.இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, லாரியில் டீசல் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, இதை நோட்டமிட்டு இருந்த நபர்கள், இருசக்கர வாகனத்தை திருடி சென்றனர்.இதுகுறித்து முருகன் மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்படி வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.நேற்று முன்தினம் வாகனத்தை திருடி சென்ற நபர்கள், சிங்கப்பெருமாள் கோவில் அருகே வாகன விபத்தில் சிக்கினர். அங்கு விரைந்து சென்ற போலீசார், அவர்களை பிடித்து விசாரித்ததில், சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த வசந்தகுமார், 21; சதீஷ்குமார், 18, என தெரிய வந்தது.மேலும், இவர்கள் மேல்மருவத்துார் பகுதியில் இரு சக்கர வாகனத்தை திருடி விட்டு, சென்னைக்கு சென்றது தெரியவந்தது. வழக்கு பதிந்த மேல்மருவத்துார் போலீசார், மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.