மாமல்லபுரம்: தமிழகம் முழுதும், கடந்த மார்ச் முதல் கோடை வெயில் தகிக்கிறது. மேலும், கத்திரி வெயில் சுட்டெரிக்கிறது. தற்போது, வானிலை மாற்றம் காரணமாக, அவ்வப்போது மழைபெய்து குளிர்ச்சியும், கடும் வெயிலுமாக உள்ளது.அரசியல் கட்சியினர், மக்களின் தாகம் தணிக்க, பொது இடங்களில் நீர், மோர் பந்தல் அமைத்துள்ளனர். துவக்க நாளில் குடிநீர், மோர், தர்பூசணி, வெள்ளரி, பழரசம் என வழங்கப்படுகிறது.அதன்பின், குடிநீர் இன்றி, வெற்று பந்தல்களாக காற்றாடுகின்றன. வெற்று பந்தல் குறித்து சமூக ஊடகங்கள், பத்திரிகைகளில் விமர்சனம் எழுகிறது.இச்சூழலில், மாமல்லபுரம் தி.மு.க.,வினர், பேரூராட்சி அலுவலக நுழைவிடத்தில், கடந்த மே 9ம் தேதி முதல் குடிநீர் வழங்க துவங்கினர். அதற்காக பிரத்யேக பாதுகாப்பகம் அமைத்து, அதில் குடிநீர் கேன் வைக்கப்பட்டுள்ளது.தொண்டர் ஒருவர், தினமும் காலை குடிநீர் நிரப்பி, இரவு வரை மக்கள் பயன்பெறுகின்றனர். இரவில் பூட்டி, காலை திறக்கப்படுகிறது. பொதுமக்கள், சுற்றுலா பயணியர், தி.மு.க.,வின் பிரத்யேக ஏற்பாட்டை கண்டு வியக்கின்றனர்.