| ADDED : ஜூலை 26, 2024 02:36 AM
மாமல்லபுரம்:மாமல்லபுரம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை தடத்தில், நீர்ச்செறிவு அதிகம் உள்ள பகுதிகளில், கான்கிரீட் தரைதளம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.மாமல்லபுரம் - புதுச்சேரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை வழித்தடம், மாமல்லபுரம் - முகையூர், முகையூர் - மரக்காணம் மற்றும் மரக்காணம் - புதுச்சேரி என, மூன்று கட்டங்களாக நான்கு வழிப்பாதையாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.கடந்த ஆண்டு ஜூன் மாதம் பணிகள் துவக்கப்பட்டு, பெரிய, சிறிய பாலங்கள் கட்டுமானப் பணிகளுடன் சாலைப்பணிகள் தீவிரமடைந்து உள்ளன.ஏரி, குளம் ஆகிய நீர்நிலைகளை ஒட்டி, சாலை கடக்கும் பகுதிகளில், தரையின் கீழ்ப்பகுதி அதிக நீர்ச்செறிவுடன் உள்ளது.அத்தகைய பகுதிகளில் வாகனங்கள் அதிகளவில் கடக்கும்போது, நீர்ச்செறிவால் வாகன எடை தாங்காமல், மண் இளகி, வாகனங்களின் அழுத்தத்தால் சாலை உள்வாங்க வாய்ப்பு உள்ளது.அதனால், அப்பாதிப்புகளை தவிர்க்க, நீர்நிலைகளுக்கு அருகில் சாலை கடக்கும் நீர்ச்செறிவு பகுதிகளில், சாலையில் நீர் புகாதவாறு, தரைப்பகுதியில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.