உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நேர்கல் தடுப்பால் உருவான கடற்கரை நிரந்தர தீர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி

நேர்கல் தடுப்பால் உருவான கடற்கரை நிரந்தர தீர்வால் மீனவர்கள் மகிழ்ச்சி

கடலுார்:கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சி பகுதியில், பெரியகுப்பம், சின்னகுப்பம், ஆலிகுப்பம் ஆகிய மீனவர் பகுதிகள், 2 கி.மீ., தொலைவிற்குள் உள்ளன. இங்கு, நீண்டகாலமாக ஏற்பட்ட கடலரிப்பால், மீனவர்கள் பாதிக்கப்பட்டனர்.கடற்கரை மணற்பரப்பு அழிந்து, மீன்பிடி படகுகள், வலைகள் ஆகியவற்றை வைக்க இடமில்லாமல், மீனவர்கள் அவதிப்பட்டு வந்தனர். வசிப்பிட பகுதியில் சில தெருக்கள் கடலில் மூழ்கின. கடல்நீர் படிப்படியாக நிலத்தில் புகுவதால், மேலும் வீடுகள் மூழ்கும் அபாயம் ஏற்பட்டது.தமிழக மீன்வளத் துறை, தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில், மூன்று கோடி ரூபாயில், பெரியகுப்பத்தில் அமைத்த மீன் இறங்குதளமும் சீரழிந்தது. இதை பாதுகாக்க அமைத்த, 'கேபியான் பாக்ஸ்' கம்பி வலை தடுப்பு அரணும் பயனின்றி அழிந்தது.இந்நிலையில், கடலரிப்பை நிரந்தரமாக தடுக்க, மீன்வளத்துறை திட்டமிட்டது. மத்திய புவி அறிவியல் துறையின் தேசிய கடலியல் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் வாயிலாக, 25 கோடி ரூபாயில், 'டைக்' எனப்படும் மணல் அணையை, 2019ல் கடலில் அமைத்தது. அதுவும் ஒரே ஆண்டில் வீணானது.இதற்கிடையே, கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில், கடற்கரையில் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி, குறிப்பிட்ட இடைவெளியில், பல வரிசைகளில் பாறை கற்களை குவித்து நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டது.இத்தடுப்பு கடலரிப்பை தடுத்தது. கடற்பகுதி மணல், கரையில் குவிந்து, புதிய மணற்பரப்பு உருவானது.இதையடுத்து, கடலுாரின் மூன்று மீனவ பகுதிகளையும் ஒருங்கிணைத்து, 31 கோடி ரூபாய் மதிப்பில், நேர்கல் தடுப்பு அமைக்கப்பட்டது.இத்திட்டத்தில், சின்னகுப்பம், ஆலிகுப்பம் பகுதிகளில் வலைபின்னல் கூடங்கள், பெரியகுப்பம் பகுதியில் கருவாடு உலர்த்தும் தளம் ஆகியவையும் அடங்கும்.கடந்த ஓராண்டிற்கு முன், கற்கள் குவிக்க துவங்கி, இரண்டு மாதங்களுக்கு முன் நிறைவுபெற்றது. தற்போது, படிப்படியாக மணல் குவிய துவங்கி, கடற்கரை உருவாகி வருகிறது. படகுகள், வலைகள் வைக்க, நிரந்தர தீர்வு கிடைத்துள்ளதாக, அப்பகுதி மீனவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை