| ADDED : ஆக 09, 2024 02:00 AM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், சிறுதாவூர் கிராமத்தில் துவக்கப்பள்ளியும் உயர்நிலைப்பள்ளியும் ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. துவக்கப்பள்ளியில் 150 மாணவ - மாணவியரும், உயர்நிலைப்பள்ளியில் 202 மாணவ - மாணவியரும் படிக்கின்றனர்.இப்பள்ளிக்கு போதிய இடவசதி இல்லாததால், வகுப்பறை, கழிப்பறை, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. புதிய கட்டடமும் கட்ட முடியவில்லை. ஏற்கனவே உள்ள கட்டடம் சேதமடைந்து பூட்டி வைக்கப்பட்டுள்ளது. மற்ற கட்டடங்களில் வகுப்புகள் நடக்கின்றன.இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி நடந்த போது, 10ம் வகுப்பு அறையில், நண்பகல் 1:30 மணிக்கு, வகுப்பறையில் இருந்த மாணவியர் மூவரின் தலையில், கட்டடத்தின் கூரை இடிந்து விழுந்தது.அதில், அவர்கள் மூவருக்கும், தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள், உடனடியாக மீட்கப்பட்டு, திருப்போரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர்.இதற்கிடையில், கூரை இடிந்து விழுந்த வகுப்பறை கட்டடத்திலிருந்து, அனைத்து மாணவ - மாணவியரும் வெளியேற்றப்பட்டு, பள்ளி வளாகத்தில், வெளிப்புறத்தில் அமரவைக்கப்பட்டனர்.கல்வி அதிகாரிகள், போலீசார் உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பள்ளிக்கு வந்து விசாரித்தனர். அப்போது, நீண்ட காலமாக பள்ளியில் போதிய வசதி இல்லை. அரசும் நடவடிக்கை எடுப்பதில்லை என கூறி வாக்குவாதம் செய்தனர்.