| ADDED : ஜூலை 19, 2024 12:25 AM
மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே கருங்குழி ஏரி, 80 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து, பாசன கால்வாய் வாயிலாக, 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.மதுராந்தகம் ஏரியில், 160 கோடி ரூபாயில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடக்கின்றன.இதனால், கருங்குழி ஏரியில் நீர் இல்லாததால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக, மதுராந்தகம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.இதனால், ஏரி மதகு உடைக்கப்பட்டு, கிளியாற்றில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வீணாக கிளியாற்றில் திறந்து விடப்படும் தண்ணீரை, கருங்குழி ஏரி நீர்வரத்து கால்வாய் பகுதியில் கால்வாய் அமைத்து, கருங்குழி ஏரிக்கு திருப்பி விட வேண்டுமென, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.இது குறித்து, விவசாயி ப.கஜேந்திரன், 50,என்பவர் கூறியதாவது:மதுராந்தகம் ஏரியில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணி நடப்பதால், முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.சீரமைப்பு பணிகள் முடியும் வரை, கருங்குழி ஏரிக்கு நீர்வரத்து கால்வாயை சீரமைத்து, மதுராந்தகம் ஏரியில் இருந்து நீர் செல்லும் வகையில் துார்வாரி, ஏரி நீரை மடை மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.