மாமல்லபுரம் : மாமல்லபுரம் உள்வட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம், மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதி பகுதியில் இயங்குகிறது. 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட அலுவலக கட்டடம், நாளடைவில் பலமிழந்தது.சுவர் விரிசலடைந்து, கூரை பெயர்ந்து சீரழிந்தது. ஆய்வாளர் உள்ளிட்டோர் அபாயத்துடன் பணிபுரிந்தனர். அவ்வப்போது மழைநீர் கட்டடத்திற்குள் புகுந்து, பதிவேடுகள் மற்றும் அலுவலக கணினி உள்ளிட்டவற்றை பாதுகாக்க இயலவில்லை.கட்டடத்தின் அபாய நிலையால், கடந்த ஆண்டு, அருகில் உள்ள பழைய குறுகிய கிராம நிர்வாக அலுவலக கட்டடத்திற்கு, வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மாற்றப்பட்டது.அங்கு போதிய இடவசதி இல்லாததால், தற்போது, மீண்டும் பாழடைந்த கட்டடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதை இடித்து, 21 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய கட்டடம் கட்ட முடிவெடுக்கப்பட்டது.தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சப்தகன்னியர் வளாகம் அருகில், இந்த அலுவலகம் உள்ள நிலையில், தொல்லியல் பகுதி 100 மீ., சுற்றளவில் கட்டடம் கட்ட, தொல்லியல் துறையின் தடை உள்ளது.எனவே, புதிய கட்டடம் கட்ட, தொல்லியல் கட்டட அங்கீகார அனுமதி குழுவிடம், இதற்கான அனுமதி கோரி முறையிடப்பட்டது. ஆனால், அனுமதி மறுக்கப்பட்டதால், மூன்று ஆண்டுகளாக புதிய கட்டடம் கட்டும் பணி கிடப்பில் உள்ளது.பாழடைந்த கட்டடம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளதால், தொல்லியல் துறையின் அனுமதி பெறவும், மாற்று எற்பாடு செய்யவும், வருவாய்த்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதிவாசிகள் வலியுறுத்தி உள்ளனர்.