உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவசாயிகளுக்கு பசுந்தாள் விதை மண்வளம் பாதுகாக்க நடவடிக்கை

விவசாயிகளுக்கு பசுந்தாள் விதை மண்வளம் பாதுகாக்க நடவடிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன. மாவட்டத்தில், 1,67,500 ஏக்கர் பரப்பளவில், விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.விவசாய நிலங்களில், சம்பா, நவரை, சொர்ணவாரி ஆகிய பட்டங்களில், நெல், உளுந்து, மணிலா உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இதில், மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில், முழுமையாக விவசாயம் சாகுபடி செய்யப்படுகிறது.

ரசாயன உரங்கள்

பல ஆண்டுகளுக்கு முன், விவசாய நிலங்களில் தழைகளையே இயற்கை உரமாக பயன்படுத்தி, நெல் சாகுபடி செய்து வந்தனர். அப்போது, ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகமாக இல்லை.கடந்த சில ஆண்டுகளாக, நெல் உற்பத்தியை அதிகரிக்க, இயற்கையான உரங்களை தவிர்த்து, ரசாயன உரங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால், மண்வளம் பாதிக்கப்படுகிறது. வேதியியல் பொருட்களை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், மண்ணும் நீரும் நச்சுத் தன்மையடைந்து, மனித வாழ்வு நலிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

மன்னுயிர் காப்போம்

அவற்றை தவிர்க்கும் விதமாக, இயற்கையான பசுந்தாள் உரங்களை பயன்படுத்தி, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் இல்லாமல் வேளாண்மை செய்யும், பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மைத்துறை சார்பில், முதலமைச்சரின் 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தின் கீழ், பசுந்தாள் விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி, கலெக்டர் அருண்ராஜ் திட்டத்தை துவக்கி வைத்தார்.வேளாண்மை இணை இயக்குனர் அசோக், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜேஸ்வரி உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.மாவட்டத்தில், எட்டு வட்டாரங்களில், 6,000 ஏக்கருக்கு, பசுந்தாள் விதைகள் வினியோகம் செய்யப்பட உள்ளது. இதனை வட்டாரத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில், விவசாயிகள் பெற்றுக் கொள்ளலாம்.விவசாய நிலங்களில் பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துவதால், சாகுபடி அதிகரித்து, விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கிறது. இயற்கையான விவசாயம் செய்ய, விவசாயிகள் ஆர்வமாக வருகின்றனர். மாவட்டத்தில், 6,000 விவசாயிகளுக்கு, பசுந்தாள் விதைகள் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது.- ஆர்.அசோக்,இணை இயக்குனர், வேளாண்மைத்துறை, செங்கை.

பசுந்தாள் உரத்தின் பயன்

பசுந்தாள் உர விதை, ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து சாகுபடி செய்து, பூக்கும் தருணத்தில், 45வது நாளில் மண்ணின் ஈரம் இருக்கும்பொழுது மடக்கி உழுதல் வேண்டும். இதனால், மண்வளம் மேம்படுகிறது. பயிர் வளர்க்க தேவையான ஊட்டச்சத்துக்கள் அளித்து, சாகுபடியில் பல்வேறு நன்மைகளை விளைவிக்கிறது. மண்ணில் உள்ள வேளாண் பொருட்களின் அளவே, மண்வளத்தை நிர்ணயிக்கின்றன. பசுந்தாள் உர பயிர்களை மடக்கி உழும்போது, அவை மண்ணில் உள்ள கண்ணுக்குத்தெரியாத நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு, ஹூமஸ் எனப்படும் மக்கும் பொருள் கிடைக்கிறது. இது மண்ணின் உயிரோட்டத்தையும், நீர் பிடிப்புத் தன்மையையும் அதிகரித்து, பயிர்களின் வளர்ச்சியை பாதுகாக்கின்றது. வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் தழைச்சத்தை மண்ணிற்கு கொண்டுவர முக்கிய பங்கு வகிக்கிறது. பசுந்தாள் உர பயிர்கள், ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியுடன், காற்றிலுள்ள தழைச்சத்தை, வேர் மற்றும் தண்டு முடிச்சுகளில் சேமிக்கின்றன.அவற்றை மண்ணுக்குள் மடக்கி உழுவதால், ஒரு ஏக்கருக்கு 30 முதல் 75 கிலோ தழைச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால், விவசாயிகள் நெல் உள்ளிட்ட பயிர்களில், அதிகமாக சாகுபடி செய்யப்படும் என, வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை