திருப்போரூர், திருப்போரூர் ஒன்றியத்தில், மத்திய, மாநில அரசு நிதியுடன் நுண்ணீர் பாசனம், தெளிப்பான் இனங்கள் வாங்க, சிறு, குறு விவசாயிகளுக்கு, 100 சதவீதம் மானியத்துடன், முன்னுரிமை அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.அரசு நிர்ணயத்துள்ள குறிப்பிட்ட அளவுள்ள பொருட்களுக்கான செலவில், 100 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.கூடுதலாக போக்குவரத்து செலவினம் மற்றும் அரசு நிர்ணயித்துள்ள அளவை தாண்டும்போது, சொட்டு நீர்ப்பாசன கருவிகள் பொருத்துவதற்கான செலவு தொகை மட்டும் விவசாயிகளிடம் வசூலிக்கப்படுகிறது.இதர விவசாயிகளுக்கு, 75 சதவீத மானியத்தில், நுண்ணீர்ப் பாசனம் அமைக்கப்படுகிறது. அதேபோல், மாநில தோட்டக்கலை வளர்ச்சித்திட்டத்தின் கீழ், கத்தரி, மிளகாய், தென்னங்கன்று ஆகியவை மானிய விலையில் வழங்கப்படுகின்றன. மற்ற விவசாயிகளுக்கு, மானியம் இன்றி, தென்னங்கன்று மட்டும் முழு விலையில், ஒரு கன்று 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், ரேஷன் கார்டு நகல், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல், இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன், திருப்போரூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.நிலத்தின் வரைபடம், மண், தண்ணீர் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றையும் வழங்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.