திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி, இரண்டாவது வார்டு முத்துமாரியம்மன் கோவில் தெரு, மாதா கோவில் தெருவில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்குள்ள சாலையில், அப்பகுதிவாசிகள் சிலர் சுற்றுச்சுவரும், தடுப்பு வேலியும் அமைத்து, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.அதனால், புதிய சாலை அமைக்கும் பணி, 30 ஆண்டுகளாக தடைபட்டிருந்தது. இதனால், குண்டும் குழியுமான சாலையில், அப்பகுதிவாசிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.அதனால், இங்கு புதிய சாலை அமைக்கக்கோரி, இரண்டாவது வார்டு கவுன்சிலர் கோவிந்தராஜ், ஒன்றிய நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.இதையடுத்து, பல்வேறு கருத்து வேறுபாட்டிற்கு பின், மக்கள் ஒத்துழைப்புடன் சாலை அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.தொடர்ந்து, பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ், 3.5 மீட்டர் அகலம், 500 மீட்டர் நீளத்தில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், தார் சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இங்கு சாலை அமைக்க கோரிக்கை இருந்தது. எனினும், சிலர் சாலையை ஒட்டி ஆக்கிரமித்து சுற்றுச்சுவர், தடுப்பு வேலி அமைத்திருந்தனர். அவர்கள் அவற்றை அகற்ற மறுத்து, சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்ததால், சாலை அமைக்கும் பணி தடைபட்டது.வருவாய்த்துறை அளவீடு செய்து, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னும், சாலை அமைக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தனர். இதனால், சாலை அமைக்கும் பணி துவங்கப்பட்டு நடந்து வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.