செங்கல்பட்டு : செங்கல்பட்டு -- பல்லாவரம் வரை, போக்குவரத்து நெரிசலை குறைப்பது தொடர்பாக, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு, பரனுார் -- பல்லாவரம் வரை, வார விடுமுறை நாட்கள், பண்டிகை நாட்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை சீரமைக்க குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில், கடந்த 13ம் தேதி கலெக்டர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.அதன்பின், போக்குவரத்து நெரிசல் குறைப்பது தொடர்பாக, செங்கல்பட்டு சப்- - கலெக்டர் நாராயண சர்மா தலைமையில், 10 பேர் கொண்ட குழு அமைத்தனர்.இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு பரனுார் -- பல்லாவரம் வரை, சப்- - கலெக்டர் நாராயண சர்மா தலைமையில், தேசிய நெடுஞ்சாலைகள் நகர அமைப்பு அலுவலர், காவல் உதவி ஆணையர் போக்குவரத்து துறை, நெடுஞ்சாலைத் துறை கோட்ட பொறியாளர், அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் ஆகியோர், நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். இதில், செங்கல்பட்டு -- பல்லாவரம் வரை, தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள், சாலையின் முக்கிய சந்திப்புகளில் அனுமதி பெறாத விளம்பர பதாகைகள் கண்டறியப்பட்டது.மேலும், அனுமதியற்ற வாகன நிறுத்தம், கொடி கம்பங்கள், போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து தடுப்புகள் அமைக்க வேண்டிய இடங்கள் கண்டறியப்பட்டது. அணுகு சாலை அமைக்க வேண்டிய இடங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.இந்த ஆய்வுக்கு பின், கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு பேருந்து முனையத்தில் உள்ள கூட்ட அரங்கில், சார்- - ஆட்சியர் தலைமையில், போக்குவரத்து நெரிசல் குறைப்பது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது.இந்த குழுவின் அறிக்கையை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் வழங்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.