| ADDED : ஜூலை 22, 2024 01:29 AM
தாம்பரம்:சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலுார் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. இங்கு, ஆம்னி பேருந்துகளுக்கு பணிமனை வசதி இல்லை. இதற்காக, தாம்பரம் அடுத்த முடிச்சூரில், வெளிவட்ட அணுகு சாலையை ஒட்டியுள்ள சி.எம்.டி.ஏ., இடத்தில், ஆம்னி பேருந்து நிலையம் கட்டும் பணி 42 கோடி ரூபாயில் 5 ஏக்கரில் நடந்து வருகிறது. இந்த பணிகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் சென்னை பெருநகர்வளர்ச்சி குழுமத்தின் அமைச்சர் சேகர்பாபு, நேற்று நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறுகையில், ''ஒரே நேரத்தில் 117 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு, இந்த பேருந்து நிலையம் உருவாக்கப்பட்டு உள்ளது. பல வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள இந்நிலையம் அடுத்த மாதம் இறுதிக்குள் திறக்கப்படும். கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள், 2025 மார்ச் மாதம் முடிக்கப்படும். இந்த பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,'' என்றார்.