| ADDED : மே 30, 2024 07:21 PM
சேலையூர்:சேலையூர் அடுத்த மப்பேடு பகுதியைச் சேர்ந்தவர் கைலாஷ். இவர், மப்பேடு சந்திப்பில், அகரம்தென் சாலையை ஒட்டி, ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், வியாபாரத்தை முடித்து, கடையை பூட்டி சென்றார்.நள்ளிரவு 1:00 மணிக்கு, கடையில் தீ விபத்து ஏற்பட்டு, உள்ளே இருந்த பெயின்ட், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மின் வடங்கள் தீப்பிடித்து எரிந்தன.தீ மளமளவென பரவி, பக்கத்தில் உள்ள பேக்கரி கடையும் கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் கரும் புகைமூட்டம் ஏற்பட்டது.தாம்பரம் தீயணைப்பு துறையினர் விரைந்து, இரண்டு ஜே.சி.பி., இயந்திரங்கள் வாயிலாக கடையில் உள்ள பொருட்களை வெளியே எடுத்தனர். பின், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஏழு மணி நேரம் போராடி தீயை அணைத்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இந்த விபத்தால், சுற்றியுள்ள மாடம்பாக்கம், மப்பேடு, பதுவஞ்சேரி மக்கள், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர். அதிக மின்னழுத்தம் காரணமாக, விபத்து ஏற்பட்டிருக்கலாம் என, போலீசார் கருதுகின்றனர்; இது குறித்து விசாரிக்கின்றனர்.