உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கல்பாக்கம் - சென்னை தடத்தில் பஸ்கள் இன்றி பயணியர் தவிப்பு

கல்பாக்கம் - சென்னை தடத்தில் பஸ்கள் இன்றி பயணியர் தவிப்பு

மாமல்லபுரம்,:அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம், மாமல்லபுரம் ஆகிய பகுதிகள், 17 கி.மீ., தொலைவிற்குள் உள்ளன. சுற்றுப்புறத்தில், 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதியினர், சென்னைக்கு செல்ல, கல்பாக்கம் - சென்னை இடையே, மாமல்லபுரம் வழியே நீண்ட காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.அரசு போக்குவரத்து கழகத்தின் கல்பாக்கம் பணிமனை நிர்வாகம், கிழக்கு கடற்கரை சாலை வழியே, தடம் எண்: 118 என்ற அரசு பேருந்தும், பழைய மாமல்லபுரம் சாலை வழியே, தடம் எண்: 119 என்ற அரசு பேருந்தும் இயக்கப்பட்டது.கல்பாக்கம் - மாமல்லபுரம் இடையே ஒரே தடத்தில், மாமல்லபுரம் - சென்னை இடையே, வெவ்வேறு தடங்களில், அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்பட்டது.இப்பகுதி வாசிகள் அரசு, தனியார் பணி, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு, இந்த பேருந்துகள் வாயிலாக சென்னைக்கு சென்று வந்தனர். இந்நிலையில், பணிமனை நிர்வாகத்தினர், 10 ஆண்டுகளுக்கு முன், இப்பேருந்து சேவைகளை முற்றிலும் நிறுத்தினர்.சென்னையில் இருந்து, மாநகர பேருந்து இயக்க துவங்கியதால், அரசு பேருந்தின் வருவாய் குறைந்து, அவை நிறுத்தப்பட்டதாக, கல்பாக்கம் போக்குவரத்துக் கழக நிர்வாகத்தினர் தெரிவித்து, மீண்டும் இயக்க மறுத்தனர்.திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, கிழக்கு கடற்கரை சாலை வழியில் மட்டும், சில மாநகர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவையும் முறையாக இயக்குவதில்லை. இதனால், பல மணி நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டி உள்ளது.மாமல்லபுரம் - திருவான்மியூர் இடையே, காலை 6:30 மணிக்கு பிறகே, முதல் பேருந்து புறப்படுகிறது. அதற்கு முன் பேருந்து இல்லை. இத்தடத்தில், பழைய மாமல்லபுரம் சாலை வழியில், முற்றிலும் பேருந்து இல்லை.மாமல்லபுரம், கல்பாக்கம் பகுதியினர், புதுச்சேரி பேருந்தையே நம்பியுள்ளனர். அவை கூட்ட நெரிசலுடன் வருவதால், இப்பகுதி பயணியர் பயணம் செய்ய இயலவில்லை.அவையும், தற்போது குறைக்கப்பட்டுள்ளன. பணிக்கு செல்பவர்கள், குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை. திருவான்மியூரில், இரவு 7:00 மணிக்கு பின், சில மணி நேரத்திற்கு பேருந்து இல்லாததால், வீடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.மேலும் பெண்கள், முதியோர் கடுமைாக பாதிக்கப்படுகின்றனர். வேறு வழியின்றி, 'டாடா ஏஸ்' வாகனத்தில், 60 கி.மீ., தொலைவிற்கு, கூட்ட நெரிசலை பொறுத்து, 200 - 300 ரூபாய் வரை கொடுத்து பயணம் செய்கின்றனர்.நீண்ட இடைவெளிக்கு பின் பேருந்தில் அபாயத்துடன் தொங்கியபடி செல்கின்றனர்.எனவே, கல்பாக்கம் - சென்னை தடத்தில், முன்பு இயக்கப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்கவும், புதுச்சேரி பேருந்துகளை கூடுதலாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி