| ADDED : மே 13, 2024 05:52 AM
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றத்தில் சீரழிந்துவரும் பழைய போலீஸ் நிலைய கட்டடத்தை, பாரம்பரிய கட்டடமாக பராமரிக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருக்கழுக்குன்றத்தில், ஆங்கிலேயர் காலம் முதல் போலீஸ் நிலையம் இயங்குகிறது. பக்தவச்சலேஸ்வரர் கோவில் அருகில், தேரடிக்குளம் எனப்படும் பிரம்மதீர்த்த குளக்கரையில், சதுரங்கப்பட்டினம் சாலையை ஒட்டி, இந்நிலையம் நீண்டகாலம் இயங்கியது.நாளடைவில், பழங்கால குறுகிய ஓட்டு கட்டடம் நிலை கருதி, மாமல்லபுரம் சாலை பகுதியில் இடம் ஒதுக்கி, புதிய கட்டடம் கட்டப்பட்டது.கடந்த 2015 முதல் அங்கு இயங்குகிறது. பழமையான கட்டடம், சில ஆண்டுகளாக புறக்காவல் நிலையமாக பயன்படுத்தப்படுகிறது.சித்திரை பெருவிழா உள்ளிட்ட கோவில் திருவிழா காலத்தில் மட்டுமே, போலீசார் பயன்படுத்துகின்றனர். பின் பயனின்றி சீரழிகிறது.வேதகிரீஸ்வரர் கோவிலின் பஞ்சமூர்த்தி சுவாமியர் திருத்தேர்கள் நிறுத்தப்பட்டுள்ள இடத்தில், இக்கட்டடம் பாழடைந்து அலங்கோல அவலத்தில் உள்ளது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் கண்டு அருவருக்கின்றனர். இதை முழுமையாக பராமரித்து பாதுகாக்க, அல்லது கோவில் பயன்பாட்டு தேவைக்கு ஒப்படைக்க வேண்டும் என, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.