போக்கு கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு
அஸ்தினாபுரம்:தாம்பரம் மாநகராட்சி எல்லையில் செம்பாக்கம் ஏரி உள்ளது. மழைக்காலத்தில் இந்த ஏரி நிரம்பினால், உபரிநீர் கால்வாயில் வெளியேறி, திருமலை நகர் வழியாக சென்று, நன்மங்கலம் ஏரியில் கலக்கும்.இந்த போக்கு கால்வாய், ஏரியில் துவங்கி, 1,400 அடி துாரத்திற்கு 60 அடி அகலமாகவும், மற்ற இடங்களில், 20, 10 அடி அகலமாகவும் குறைந்து, நன்மங்கலம் ஏரியில் கலக்கும் போது, 3 அடியாக உள்ளது.பல ஆண்டுகளாக, இந்த கால்வாய் வழியாகத்தான் உபரிநீர் சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில், பல இடங்களில் கால்வாயை ஆக்கிரமித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக, அகலம் குறைந்து, சிறிய கால்வாய் போல் மாறிவிட்டது.இதனால், ஒவ்வொரு மழையின்போது, செம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், போதிய வழியின்றி தடைப்பட்டு, குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது. பல ஆண்டுகளாக இப்பிரச்னை நீடித்து வருகிறது.போக்கு கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை அதன் முழு அகலத்தில் ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த நிலையில், உபரிநீர் கால்வாயோரத்தில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. ஆனால், ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றாமல், மற்ற இடங்களில் கட்டும் பணி நடக்கிறது.கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை, பொதுப்பணித் துறையினரும் குறிப்பீடு செய்துள்ளனர். இதை, வருவாய் துறையினர் தான் அகற்ற வேண்டும். அவர்களோ எதை பற்றியும் கண்டுக்கொள்வதாக இல்லை.ஆக்கிரமிப்புகளை அகற்றாமல், தடுப்புச்சுவர் கட்டுவதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்படி கட்டினால், ஆக்கிரமிப்பாளர்களுக்கு பாதுகாப்பாக மாறிவிடும்.எனவே, வருவாய் - பொதுப்பணித் துறையினர் இணைந்து, எதற்கும் பாரபட்சம் காட்டாமல், ஆக்கிரமிப்புகளை அகற்றி, முறையாக தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.