| ADDED : ஜூலை 31, 2024 11:38 PM
மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி நான்காவது வார்டில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இங்குள்ள காந்தி சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கானோர் ரயில் நிலையம், மருத்துவமனை, கடைகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.இந்த சாலை சிதிலமடைந்து உள்ளதால், அப்பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த கணேஷ் என்பவர் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில், புறநகரில் வளந்து வரும் முக்கியமான ஊராட்சி. இந்த பகுதியில் உள்ள காந்தி சாலையை புதிதாக அமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம்.இதையடுத்து, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மாவட்ட கவுன்சிலர் நிதியில், 16 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய சிமென்ட் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.நிதி ஒதுக்கீடு செய்து, 9 மாதங்கள் கடந்தும், இதுவரை சாலை அமைக்கும் பணிகள் துவங்கப்படவில்லை. இதுகுறித்து, அமைச்சர் அன்பரசனிடம் நேரடியாக மனு அளித்துள்ளோம். எனவே, இந்த சாலையை விரைவாக சீரமைக்க, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.