| ADDED : ஜூன் 29, 2024 10:00 PM
திருப்போரூர்:திருப்போரூர் கிளை நுாலகம், 1959ல் துவக்கப்பட்டது. இதில், 2,500 உறுப்பினர்கள் உள்ளனர். 35,000 புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளன. மாணவர்கள், பொதுமக்கள் என, தினமும் 100க்கும் மேற்பட்டோர் வந்து படிக்கின்றனர்.காலை 9:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும், மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி வரையும், இந்த நுாலகம் இயங்கி வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு, திருப்போரூர் தாலுகாவாக மாற்றப்பட்டு, தற்போது 12 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், நுாலகம் இன்னும் கிளை நுாலகமாகவே செயல்பட்டு வருகிறது. எனினும், திருப்போரூர் கிளை நுாலகத்தை, முழு நேர நுாலகமாக தரம் உயர்த்த வேண்டும் என, வாசகர்கள் எதிர்பார்க்கின்றனர். அவ்வாறு தரம் உயர்த்தப்பட்டால், காலை 8:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை நுாலகம் செயல்படும். இதனால், கூடுதலாக நுாலகர்கள் நியமிக்கப்படுவர். எனவே, திருப்போரூர் கிளை நுாலகம் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாசகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.