உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  டிட்வா புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

 டிட்வா புயலால் நீரில் மூழ்கிய 1,250 ஏக்கர் நெற்பயிர் கடும் பாதிப்பு செங்கை மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயலால் பெய்த கனமழை காரணமாக, 1,250 ஏக்கர் நெற்பயிர், நீரில் மூழ்கியுள்ளது. மேலும் நுாற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கியதால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், 'டிட்வா' புயல் மற்றும் வங்க கடலில் சென்னை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்பின், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று வரை கன மழை பெய்தது. இதனால் ஏரி, குளங்கள் நிரம்பி வரும் நிலையில், வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. நீரில் மூழ்கிய நெற்பயிர் செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப் போரூர், வண்டலுார் ஆகிய தாலுகாக்களில், சம்பா பருவத்திற்கு 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்துவரும் மழையில் திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில், 1,250 ஏக்கர் நெற்பயிர்கள், நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கிய சாலைகள் தேசிய நெடுஞ் சாலையில் பரனுார், கூடுவாஞ்சேரி மற்றும் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு மற்றும் வண்டலுார் - கேளம் பாக்கம் சாலை, ஓ.எம்.ஆர்., சாலை ஆகியவற்றில் உள்ள மழைநீர் கால்வாய்களை துார்வாராததால், சாலைகளில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். வீடுகளில் புகுந்த வெள்ளம் வன்னியநல்லுார், ஊரப்பாக்கம் ஐந்தாவது தெரு ஆகிய பகுதிகளில், குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. நீலமங்கலம், திருத்தேரி, படூர், கன்னிவாக்கம் ஆகிய பகுதிகளில், தெருக்களில் மழைநீர் தேங்கியுள்ளதால், அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். அச்சிறுபாக்கம் இருளர் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. இப்பகுதியில் உள்ள தண்ணீரை அகற்றும் பணியில், ஊரக வளர்ச்சித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் கால்வாய்கள் துார்வாரப்படாததால், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கால்வாய் ஆக்கிரமிப்பு திருப்போரூர் அடுத்த படூர் கிராமத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் இருந்து வரும் மழைநீர், கால்வாய் வழியாக அங்குள்ள குளத்திற்குச் செல்கிறது. இவ்வழியாக செல்லும் கால்வாயை தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதால், மழைநீர் சாலையில் தேங்கி நிற்கிறது. தற்போது, இந்த இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மழைநீர் அகற்றம்

மாவட்டத்தில், சாலைகளில் மழைநீர் தேங்கிய பகுதிகளை கலெக்டர் சினேகா, நேற்று, ஆய்வு செய்து, சாலையில் தேங்கும் மழைநீரை அப்புறப் படுத்த, தேசிய, மாநில, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு, உத்தரவிட்டார். அதன்பின், மழைநீரை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நிரம்பி வரும் ஏரிகள்

செங்கல்பட்டு மாவட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் 528 ஏரிகள் உள்ளன. இதில், 84 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, 589 ஏரிகளில், 33 ஏரிகள் முழு கொள்ளளவு நிரம்பி வழிகின்றன. 2,512 குளங்களில், 221 குளங்கள் முழு கொள்ளளவு நிரம்பி உள்ளன. நீர் நிலைகளை பாதுகாக்கும் பணியில், நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

குடிசைகள் சேதம்

செய்யூர் வட்டத்தில் 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையால், போந்துார் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால், 52, என்பவரின் கூரை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. மேற்கு செய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சபாபதி, 65, என்பவரின் குடிசை வீடு மற்றும் சிறுமயிலுார் கிராமத்திற்கு உட்பட்ட புது காலனி பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் என்பவரது குடிசை வீட்டின் ஒரு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. சேவூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம், 45, என்பவரின் காளை மாடு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, மடவிளாகம் ஏரி உபரிநீர் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது. விளம்பூர் கிராமத்தில் முபாரக், 40, மற்றும் பூங்குணம் கிராமம் ரேகா, 35, ஆகியோரது ஆடுகள் இறந்தன.

இந்தாண்டும் மூழ்கிய தரைப்பாலம்

சிங்கபெருமாள் கோவில்- - பாலுார் சாலையில் தரைப்பாலம் மூழ்கியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். சிங்கபெருமாள் கோவில் -- பாலுார் சாலை, 13 கி.மீ., துாரம் கொண்டது. இந்த சாலையில், வெண்பாக்கம் -- ரெட்டிபாளையம் இடையே, தென்னேரி ஏரி உபரி நீர் மற்றும் 60க்கும் மேற்பட்ட ஏரிகளின் உபரி நீர் செல்லும், நீஞ்சல் மடுவு கால்வாய் உள்ளது. நீஞ்சல் மடுவு கால்வாய் இடையே, தரைப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம், ஆண்டுதோறும் மழைநீரில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டும், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் வரத்து அதிகரித்து, இந்த தரைப்பாலத்தில் 4 அடி உயரம் வரை வெள்ள நீர் செல்கிறது. இதனால், போலீசார் தடுப்புகள் வைத்து, வாகன ஓட்டிகளை மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தினர். கிராம மக்கள் பல கி.மீ., துாரம் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வீடுகளில் புகுந்த நீர்

திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய கேளம்பாக்கம் ஊராட்சியில் பாலாஜி நகர், நந்தனா நகர் உள்ளிட்ட தெருக்களில், 100க்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் 'பிரிஜ், டிவி' மற்றும் கட்டில், பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள், ஆதார் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் சேதமடைந்து உள்ளன. மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள கெங்கையம்மன் ஏரியிலிருந்து வெளியேறிய உபரிநீர் மற்றும் படூர் வடிகால்வாயிலிருந்து வெளியேறிய உபரிநீர் மேற்கண்ட பகுதிகளில் சூழ்ந்துள்ளதாக கூறப் படுகிறது. அதேபோல், திருப்போரூர் - நெம்மேலி சாலை இருபுறமும், 2 ஏக்கர் நடவு செய்யப்பட்ட நெற்பயிர், விடப்பட்ட நாற்றும் மழை நீரில் மூழ்கியுள்ளன. திருக்கழுக்குன்றம் அடுத்த அம்மணம்பாக்கம், பெரும்பேடு, நடுவக்கரை உள்ளிட்ட பகுதிகள், மிகவும் தாழ்வான இடங்கள். இப்பகுதி கால்வாய்களை துார்வாராததால் மழைநீர் வெளியேற முடியாமல், விளை நிலங்களில் தண்ணீர் தேங்குகிறது. தற்போது கனமழை பெய்ததால், நடவு செய்த நாற்றுகள் மூழ்கியுள்ளன.

வேருடன் சாய்ந்த மரங்கள்

அச்சிறுபாக்கம் ஒன்றியம், வெள்ளப்புத்துார் ஊராட்சிக்குச் செல்லும் சாலையில், அம்பேத்கர் தெரு பகுதி சாலையில், பெரிய தேக்கு மரம் ஒன்று வேருடன் சாய்ந்தது. இதனால், மதுராந்தகத்திலிருந்து வெள்ளப்புத்துார் வரை செல்லும் பேருந்து செல்ல வழியின்றி, போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. ஊராட்சி நிர்வாகத்தினர், மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், மதுராந்தகத்திலிருந்து வெளியம்பாக்கம் வழியாக முருங்கை கிராமம் வரை செல்லும் சாலையில், கரசங்கால் ரயில்வே கேட் அருகே, பெரிய வேப்ப மரம் மற்றும் தென்னை மரம் சாலையில் விழுந்தன. இதனால், பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. கீழ் அத்திவாக்கத்தில் இருந்து கொங்கரை மாம்பட்டு செல்லும் சாலையில், களத்துார் ஏரியின் உபரி நீர் செல்லும் கால்வாய் ஓரம் இருந்த பெரிய வேப்பமரம், சாலையோரம் உள்ள மின்கம்பத்தின் மீது முறிந்து விழுந்ததில், மின் ஒயர் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் நிறுத்தம் 'டிட்வா' புயல் காரணமாக, அச்சிறுபாக்கம் வட்டாரத்தில் ஒரத்தி, எலப்பாக்கம், களத்துார், கரசங்கால், தொழுப்பேடு, நெடுங்கல் உள்ளிட்ட பகுதிகளில், மின்கம்பங்கள் மீது மரங்கள் முறிந்து விழுந்ததால், நேற்று காலை முதல் மாலை வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை