உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிதாக 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம்... துவக்கம்:நீண்ட கால பிரச்னைக்கு விடிவு பிறந்ததால் நிம்மதி

புதிதாக 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம்... துவக்கம்:நீண்ட கால பிரச்னைக்கு விடிவு பிறந்ததால் நிம்மதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் புதிதாக துவக்கப்பட்டுள்ளன. இதனால், இப்பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட மின்வாரிய மேற்பார்வையாளர் அலுவலகம் கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு, மறைமலை நகர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய மின் கோட்டங்கள் உள்ளன. இந்த கோட்டங்களின் கீழ், மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. செங்கல்பட்டு கோட்டத்தில், செட்டிப்புண்ணியம் உதவி பொறியாளர் பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. செட்டிப்புண்ணியம் மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகத்தின் கீழ், 15,000க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளன. இந்த அலுவலத்திற்கு புதிய மின் இணைப்பு, மின் கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு, நுகர்வோர் வந்து செல்கின்றனர். இதில், வீராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மின் கட்டணம் செலுத்துவதற்காகவும், புதிய மின் இணைப்பு பெறுவதற்கும், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்ந்தது. இதனால், வீராபுரம் பகுதியில் மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என, மின்வாரிய அதிகாரிகளிடம் கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதே போன்று, மறைமலை நகர் கோட்டத்தில் ஒன்பது இடங்களிலும், மதுராந்தகம் கோட்டத்தில் வேலுார் கிராமத்திலும் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டுமென, மின்வாரிய அதிகாரிகளிடம், கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 இடங்களில் மின்வாரிய உதவி பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் ஏற்படுத்த வேண்டுமென, மின்வாரிய தலைவருக்கு, மேற்பார்வை பொறியாளர் 2018ம் ஆண்டு, நிர்வாக அறிக்கை அனுப்பி வைத்தார். ஆனால், மின்வாரிய பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் திறப்பது கிடப்பில் போடப்பட்டது. அதன் பின், மின்வாரிய பொறியாளர் பிரிவு அலுவலகங்களில் அதிகமான மின் இணைப்புகள் உள்ளதால், நுகர்வோர்களுக்கு சேவை செய்வதில் தாமதம் ஏற்படுவதாக, மின்வாரிய தலைவரிடம் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மின் பகிர்மான மேற்பார்வை அலுவலகம் கட்டுப்பாட்டில் உள்ள செங்கல்பட்டு கோட்டத்தில் வீராபுரம், பூஞ்சேரி, பொன்விளைந்தகளத்துார். மறைமலை நகர் கோட்டத்தில் சிட்கோ, கோகுலபுரம், பொத்தேரி, காயரம்பேடு, நெல்லிகுப்பம், புதுப்பாக்கம், தையூர், நாவலுார், மண்ணிவாக்கம். மதுராந்தகம் கோட்டத்தில் வேலுார் ஆகிய பகுதிகளில் மின்வாரிய பொறியாளர் பிரிவு அலுவலகங்கள் அமைக்க, கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி, மின்வாரிய தலைவர் உத்தரவிட்டார். அதன் பின் தற்போது, செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் துவக்கப்பட்டு உள்ளன. இந்த அலுவலகங்களில் உதவி பொறியாளர் மற்றும் மின் பாதை ஆய்வாளர், வணிக உதவியாளர், வணிக ஆய்வாளர், ஒயர்மேன் உள்ளிட்ட, 20 பணியிடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது, உதவி பொறியாளர் உள்ளிட்ட ஐந்து பேர் மட்டுமே, இந்த அலுவலகங்களில் பணிபுரிந்து வருகின்றனர். புதிதாக திறக்கப்பட்ட அலுவலகங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. மேலும் கணினி, மேஜைகள் உள்ளிட்ட உபகரணங்களும் இல்லை. இதனால், மற்ற அலுவலகங்களில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை வாங்கி, ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, இந்த புதிய அலுவலகங்களில் ஊழியர்களை நியமிக்கவும், கணினி உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கித் தரவும், மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில், 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் துவக்கப்பட்டு, உதவி பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மற்ற ஊழியர்களை நியமிக்கவும், அலுவலகத்திற்குத் தேவையான உபகரணங்கள் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. - மின்வாரிய அதிகாரிகள், செங்கல்பட்டு. 13 மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் கோட்டம் - இடம் செங்கல்பட்டு வீராபுரம், பூஞ்சேரி, பொன்விளைந்தகளத்துார் மறைமலைநகர் சிட்கோ, கோகுலபுரம், பொத்தேரி, காயரம்பேடு, நெல்லிகுப்பம், புதுப்பாக்கம், தையூர், நாவலுார், மண்ணிவாக்கம் மதுராந்தகம் வேலுார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி