மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. தற்போது, பங்களாதேஷ், பர்மா, இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா மற்றும் மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து, பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.தற்போது, கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைகுத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளிமூக்கு வாத்து உள்ளிட்ட 31 வகையான பறவைகள் வந்துள்ளன.தற்போது, ஏரியில் 30,000 த்திற்கும் அதிகமான பறவைகள் உள்ளன. வர்ணநாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பறவை இனங்கள், முட்டையிட்டு அடைகாத்து வருகின்றன.நத்தைகுத்தி நாரை, கூழைக்கடா, கரண்டிவாயன் உள்ளிட்ட பறவை இனங்கள் குஞ்சு பொறித்து உள்ளன.இப்பறவைகளை காண வருகை தரும் சுற்றுலா பயணியர் மற்றும் கல்வி சுற்றுலா வரும் பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் வருகை அதிகரித்துள்ளது.நேற்று, மேகாலயா மாநில அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் விலங்கியல் துறை, மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ - மாணவியர், வேடந்தாங்கலுக்கு கல்வி சுற்றுலா வந்தனர்.
சுற்றுலா ஆர்வலர்கள் விருப்பம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகளைக் காண டெலஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பறவைகள் சரணாலயத்திற்கு அருகே உள்ள கடைகளில், டெலஸ்கோப் வாடகைக்கு விடப்படுகிறது. அதற்கு, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் வசூல் செய்கின்றனர். இதை தவிர்க்கும் வகையில், துாரத்தில் உள்ள பறவைகளைக் காண, அனைத்து மக்களும் விருப்பம் தெரிவிக்கின்றனர். இதனால், அதி நவீன கேமராக்கள் மூலம் காட்சிப்பதிவு செய்து, எல்.இ.டி. திரை வாயிலாக நேரலையில் திரையிட வேண்டும் என, சுற்றுலா ஆர்வலர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர். 'ஐ லவ் வேடந்தாங்கல்' என, செல்பி பாயின்ட் அமைத்து தர வேண்டுமெனவும் சுற்றுலா பயணியர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.