உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிடப்பில் போன அச்சிறுபாக்கம் புதிய தாலுகா பரிந்துரை...விமோசனம் வருமா? :வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்

கிடப்பில் போன அச்சிறுபாக்கம் புதிய தாலுகா பரிந்துரை...விமோசனம் வருமா? :வரும் சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்க வலியுறுத்தல்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா அலுவலகம் அமைக்க, மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது, கிடப்பில் போடப்பட்டுள்ளது. வரும் சட்டசபை கூட்டத்தொடரில், முதல்வர் இதுகுறித்து அறிவிக்க வேண்டுமென, இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலுார், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்கள் உள்ளன.இதில் மதுராந்தகம், செய்யூர் ஆகிய தாலுகாக்களில், அதிகமான கிராமங்கள் உள்ளன. அச்சிறுபாக்கம் அடுத்த அனந்தமங்கலம் கிராமம், விழுப்புரம் மாவட்டத்திற்கு அருகில் உள்ளது.இங்குள்ள கிராமவாசிகள் இலவச வீட்டுமனை பட்டா, விவசாய நிலங்கள் பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சேருவதற்கு ஜாதி, இருப்பிடம், வருமானச் சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு தேவைக்காக, 50 கி.மீ., துாரம் உள்ள மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.இப்பகுதியில், போக்குவரத்து வசதி அதிகம் இல்லாததால், பொதுமக்கள் காலையிலேயே அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்துகளில், மதுராந்தகம் தாலுகா அலுவலகத்திற்கு வருகின்றனர். சிலர், இருசக்கர வாகனங்களில், நீண்ட துாரம் பயணித்து மதுராந்தகம் வருகின்றனர்.மதுராந்தகம் தாலுகா அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்கும் போது, கால விரயம், பொருள் விரயம் ஏற்படுகிறது. இதேபோல், சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துார், அச்சிறுபாக்கம் ஆகிய பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன.இப்பகுதிகளில் தனியார் கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன.ஆனால் மேல்மருவத்துார், சோத்துப்பாக்கம் ஆகிய பகுதி மக்கள், 25 கி.மீ., துாரம் உள்ள செய்யூர் தாலுகாவிற்கு, அனைத்து தேவைகளுக்கும் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.இவற்றை தவிர்க்க மதுராந்தகம், செய்யூர் தாலுகா பகுதிகளில், அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள கிராமங்களைப் பிரித்து, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்த வேண்டும் என, அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பியது. ஆனால், இந்த பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது.இந்நிலையில், இப்பகுதி மக்களின் நலன் கருதி, அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு தாலுகா அமைக்க, வரும் சட்டசபை கூட்டத்தொடரில், தமிழக அரசு அறிவிக்க வேண்டுமென, இப்பகுதி கிராமவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.மதுராந்தகம், செய்யூர் தாலுகாவிற்கு பட்டா மாற்றம், இலவச வீட்டுமனை மற்றும் வாரிசு சான்றிதழ், பள்ளி, கல்லுாரியில் மாணவர்களை சேர்க்க சான்றிதழ்கள் பெற, செல்ல வேண்டி உள்ளது. தாலுகா அலுவலகத்திற்கு காலையில் சென்றால், மாலை வரை அங்கேயே காத்திருக்க வேண்டி உள்ளது. அச்சிறுபாக்கம் தாலுகா அமைந்தால், பல்வேறு வகையில் பொதுமக்கள் பயனடைவர்.- எஸ்.சரவணன்,வெங்கடேசபுரம், அச்சிறுப்பாக்கம்.

இணைக்கப்படும் குறுவட்டங்கள்

அச்சிறுபாக்கத்தை தலைமையிடமாகக் கொண்டு அமைக்க இருக்கும் புதிய தாலுகாவிற்கான குறுவட்டங்கள்மதுராந்தகம் தாலுகா குறுவட்டங்கள்:ஒரத்தி, அச்சிறுபாக்கம், பெரும்பாக்கம் குறுவட்டத்தில் அத்திவாக்கம், திருமுக்காடு, உத்தமநல்லுார், காட்டுக்கூடலுார், நேரமம், ஒரத்துார், பாதிரி, வேலாமூர் கிராமங்கள்.செய்யூர் தாலுகா குறுவட்டங்கள்:சித்தாமூர், கயப்பாக்கம், சித்தாமூர், கயப்பாக்கம் ஆகிய குறுவட்டங்கள். அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை