மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, மானிய விலையில், 55மீன்பிடி படகு இன்ஜின், 800 'லைப் ஜாக்கெட்'டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், கானத்துார் ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக் கழிநாடு ஆலம்பரைகுப்பம் வரையுள்ள கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் வசிக்கின்றனர்.வாழ்வாதார தொழிலாக, விசைப்படகில் கடலுக்குச் சென்று மீன் பிடிக்கின்றனர். அவர்களுக்கு, மானிய விலையில் படகு, வெளிப்புறம் பொருத்தும் இன்ஜின், வலை, டீசல், லைப் ஜாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை, தமிழக மீன் வளத்துறை மானிய விலையில் வழங்குகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், மீனவ கிராமத்திற்கு ஒன்று வீதம் என, 55 படகில் வெளிப்புறம் பொருத்தும் இன்ஜின்களும், படகிற்கு தலா நான்கு என, 800லைப் ஜாக்கெட்டுகளும் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விருப்பம் உள்ள மீனவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், மீனவ சபையினரிடம் மீன்வளத் துறையினர் அறிவித்துள்ளனர்.அத்துறையினர் கூறியதாவது:மீனவர் விரும்பும் குதிரைத்திறனில், அதிகபட்சம் 1.8 லட்சம் ரூபாய் மதிப்பில், இன்ஜின் வாங்கலாம். விலை மதிப்பில், 40 சதவீதம் மானியம் அளிக்கப்படும்.அதேபோல், 1,500 ரூபாய் மதிப்புள்ள லைப் ஜாக்கெட்டுகளுக்கு, பயனாளிகள் பங்களிப்பாக, 375 ரூபாய் மட்டும் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.