| ADDED : பிப் 01, 2024 10:45 PM
மதுராந்தகம்:மதுராந்தகம் ஏரிக்கரை, திருச்சி- - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திண்டுக்கல்லில் இருந்து சென்னையில் நடைபெறும் பா.ம.க., பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, 16 நபர்களுடன் மகேந்திரா டூரிஸ்ட் வேன் சென்றது.அப்போது, பண்ருட்டியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, மதுராந்தகம் ஏரிக்கரை பயணியர் பேருந்து நிறுத்தத்தில், பயணியரை இறக்கிக் கொண்டிருந்தது.அப்போது, எதிர்பாராத விதமாக டூரிஸ்ட் வேன் பேருந்தின் பின்பக்கம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த திண்டுக்கல்லை சேர்ந்த பூபதி, 46, பேருந்தில் பயணம் செய்ய காத்திருந்த, மதுராந்தகத்தை சேர்ந்த இந்திரா, 58, ஆகிய இருவருக்கும், காலில் முறிவு ஏற்பட்டது. வேனில் பயணம் செய்த எட்டு பேருக்கு, சிறிய காயங்கள் ஏற்பட்டன.தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற மதுராந்தகம் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.