உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பொறியாளரை தற்கொலைக்கு துாண்டியதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்கு

 பொறியாளரை தற்கொலைக்கு துாண்டியதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் மீது வழக்கு

தாம்பரம்: மாநகர போக்குவரத்து கழக பணிமனை இளநிலை பொறியாளர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அதிகாரிகள் இருவர் மீது, தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனுார், ஜவகர் அய்யா நகரை சேர்ந்தவர் யுவராஜ், 40. தாம்பரம் மாநகர போக்குவரத்து கழக பணிமனையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். நவ., 17ம் தேதி இரவு, காட்டாங்கொளத்துார் - பொத்தேரி இடையே, ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரணையில், 'தான் தற்கொலை செய்துகொண்டால், பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ், எச்.ஆர்.டி., சொர்ணலதா ஆகிய இருவர் தான் பொறுப்பு. இதுவே என் மரண வாக்குமூலம்' என, யுவராஜ் தற்கொலை செய்யும் முன், தமிழக டி.ஜி.பி.,க்கு மின்னஞ்சல் அனுப்பியிருந்தது தெரியவந்தது. அதே நேரத்தில், யுவராஜின் குடும்பத்தினர், தாம்பரம் ரயில்வே காவல் நிலையத்தில், யுவராஜ் தற்கொலைக்கு, மாநகர போக்குவரத்து பணிமனை கிளை மேலாளர் கோவிந்தராஜ், எச்.ஆர்.டி., சொர்ணலதா ஆகியோர் தான் காரணம்; இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை, உடலை வாங்க மாட்டோம்' எனக்கூறி, திரும்பி சென்றனர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி, கிளை மேலாளர் கோவிந்தராஜ், எச்.ஆர்.டி., சொர்ணலதா ஆகியோர் மீது, நேற்று முன்தினம், யுவராஜை தற்கொலைக்கு துாண்டியதாக வழக்கு பதிவு செய்தனர். இந்த தகவல் அறிந்த இருவரும் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து, யுவராஜின் உடலை, நேற்று முன்தினம் பிரேத பரிசோதனைக்கு பின், அவரது குடும்பத்தினர் பெற்று, அடக்கம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்