உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; தண்டரைப்பேட்டை மடுவின் உடைந்த பாலத்தால் ஆபத்து

செங்கல்பட்டு: புகார் பெட்டி; தண்டரைப்பேட்டை மடுவின் உடைந்த பாலத்தால் ஆபத்து

தண்டரைப்பேட்டை மடுவின் உடைந்த பாலத்தால் ஆபத்து

மதுராந்தகம் வட்டம், அச்சிறுபாக்கம் ஒன்றியத்தின் தண்டரைபேட்டை மடுவின் தரைப்பாலம், சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையால் உடைந்து, ஆபத்தான நிலையில் உள்ளது.இதில், தினமும் அதிக அளவிலான வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, உடைந்த நிலையில் உள்ள தரைப்பாலத்தை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பி.ஆனந்தன், மதுராந்தகம்.

பச்சம்பாக்கம் கிராம கைபம்ப் சீரமைக்க வேண்டுகோள்

பவுஞ்சூர் அடுத்த பச்சம்பாக்கம் கிராமத்தில், விநாயகர் கோவில் எதிரே, அப்பகுதிவாசிகள் பயன்பட்டிற்காக, 20 ஆண்டுகளுக்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்து, கை பம்ப் அமைக்கப்பட்டது.கை பம்ப் தண்ணீரை, அப்பகுதிவாசிகள் கூடுதல் நீர் ஆதாரமாக துணி வைக்க, பாத்திரம் கழுவ மற்றும் வீட்டு உபயோகங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.சில ஆண்டுகளாக, முறையான பராமரிப்பு இன்றி கை பம்ப் பழுதடைந்ததால், கூடுதல் நீர் ஆதாரத்திற்கு அப்பகுதிவாசிகள் அவதிப்படுகின்றனர்.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, கை பம்ப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- க.அருண்குமார், பவுஞ்சூர்.

கிளாம்பாக்கம் பஸ் முனையத்திற்கு சிற்றுந்து வசதி ஏற்படுத்த கோரிக்கை

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து, ஊரப்பாக்கம் மேற்கு ரயில் நிலையம், ஆதனுார், அருள் நகர், கங்கை நகர், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் வரை, தினசரி ஏராளமான பயணியர் சென்று வருகின்றனர்,அதேபோல், கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் இருந்து, கூடுவாஞ்சேரி பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலக பேருந்து நிறுத்தம், ஊரப்பாக்கம் டீ கடை பேருந்து நிறுத்தம் வழியாக மீண்டும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கும் ஏராளமானோர் சென்று வருகின்றனர்.இவர்களுக்கு போதுமான போக்குவரத்து வசதி இல்லாததால், தினசரி அதிக கட்டணம் கொடுத்து ஆட்டோவில் பயணிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.அதனால், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் செல்வதற்கும், அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வருவதற்கும், சிற்றுந்து சேவை ஏற்படுத்தினால், பயணியருக்கு பயனுள்ளதாக இருக்கும்.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, இப்பகுதிக்கு சிற்றுந்து சேவையை துவங்க வேண்டும்.- டி.ஆனந்தி, ஊரப்பாக்கம்.

ஏகாட்டூர் சாலையில் தேங்கிய கழிவுநீரை அகற்ற வலியுறுத்தல்

திருப்போரூர் அடுத்த ஏகாட்டூர் ஓ.எம்.ஆர்., சாலை வழியாக, ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. மேலும், அங்கு மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன.சாலையையொட்டி ஏராளமான வணிக கடைகள் உள்ளன. அங்கு, முறையான கால்வாய் வசதி இல்லாததால், சாலையோரம் கழிவுநீர், மழைநீர் தேங்கியுள்ளது.இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்வோருக்கும் இடையூறாக உள்ளது. சாலையில் தேங்கியுள்ள கழிவுநீர், மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.வினோத், ஏகாட்டூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ