உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கல்பட்டு ரயில் நிலைய பணி...மந்தம் !:விரைந்து முடிக்க பயணியர் எதிர்பார்ப்பு

 செங்கல்பட்டு ரயில் நிலைய பணி...மந்தம் !:விரைந்து முடிக்க பயணியர் எதிர்பார்ப்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 'அம்ரித் பாரத்' திட்ட பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு ரயில் நிலையம் முக்கிய சந்திப்பாக உள்ளது. இதன் வழியாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு, விரைவு ரயில்கள் சென்று வருகின்றன. செங்கல்பட்டு -- சென்னை கடற்கரை மற்றும் அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளுக்கு, மின்சார ரயில்கள் சென்று வருகின்றன.இந்த ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு, அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் என, தினமும் 1,000த்துக்கும் மேற்பட்டோர், அத்தியாவசிய பணிகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக சென்று வருகின்றனர். இந்த வளாகத்தில் டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் தனியாக உள்ளன. இதனால், பயணியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ரயில் நிலைய நடைமேடை பகுதியில், டிக்கெட் கவுன்டர், முன்பதிவு மையம் உட்பட அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, ரயில்வே நிர்வாகம் மற்றும் மத்திய அரசிடம், ரயில் பயணியர், சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தினர்.இதைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ள, அம்ரித் பாரத் திட்டத்தில், 22.14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, கட்டுமான பணிகளுக்கு 'டெண்டர்' விடப்பட்டது.இப்பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக, கடந்தாண்டு ஜூலை மாதம் 12ம் தேதி துவக்கி வைத்து, 150 நாட்களில் முடிக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு, ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது. அதன்பின், ரயில் நிலைய வளாகத்தில், முழுமையாக பணிகள் மேற்கொள்ள பயணியருக்கு மாற்று பாதை அமைக்கப்பட்டது. அதன்பின், பணிகள் துவங்கி மந்தமாக நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பயணியர் சென்று வருவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் வாகனங்கள் நிறுத்த முடியாமல் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என, ரயில்வே நிர்வாகத்திற்கு உத்தரவிட்டும், பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. எனவே, ரயில் நிலைய பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.ரயில் நிலைய வளாகத்தில் பணி நடைபெறுவதால், மாற்று பாதை வழியாக பயணியர் சென்று வருகின்றனர். இவ்வழியாக செல்லும் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வி.அனிதாரயில் பயணி, செங்கல்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை