| ADDED : டிச 26, 2025 05:50 AM
திருப்போரூர்: இயேசு கிறிஸ்து பிறந்து தினமான டிச., 25 ம் தேதி ஆண்டுதோறும் உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் பண்டிகை விழா கொண்டாடப்படுகிறது. விழா முன்னிட்டு, வீடு, சர்ச்சுகளில் ஸ்டார் கட்டி அலங்காரம் செய்தல், குடில்கள் அமைத்தல், கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து சபை மக்களின் வீடுகளுக்கு செல்லுதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. தி ருப்போரூர் குருசேகரம், சி.எஸ்.ஐ., துாய ஜார்ஜ் சர்ச்சின் சார்பில், நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, இயேசுவின் பிறப்பை நினைவு கூர்ந்து, இருளை நீக்கி ஒளியைக் கொண்டுவரும் நம்பிக்கையின் அடையாளமாக மெழுகுவர்த்தி ஏந்தி பவனி செல்லும் நிகழ்ச்சி நடந்தது. திருப்போரூர் குருசேகர தலைவர் கனகராஜ், குருசேகர செயலர் ஞானசேகர், குருசேகர பொருளர் தாமஸ் மனோகரன் மற்றும் சபை மக்கள் அனைவரும் கையில் மெழுவர்த்தி ஏந்தி பாடல் பாடியபடி சர்ச்சிலிருந்து ஊர்வலமாக சென்றனர். ஓ.எம்.ஆர்., சாலை வழியாக ரவுண்டானா வரை சென்று, மீண்டும் அதே சாலையில் ஆலயத்திற்கு வந்து 12:00 மணிக்கு பவனி நிறைவடைந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு பின் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை துவங்கி நடைபெற்றது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தண்ட லம் சி.எஸ்.ஐ., நல்மேய்ப்பர் சர்ச்சிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடைபெற்றது.