உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலை நகர் நடைமேம்பாலத்தில் இருள் மின் இணைப்பு வழங்காததால் பயணியர் அவதி

மறைமலை நகர் நடைமேம்பாலத்தில் இருள் மின் இணைப்பு வழங்காததால் பயணியர் அவதி

மறைமலை நகர் : திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கூடுவாஞ்சேரி -- மகேந்திரா சிட்டி வரை எட்டு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த மூன்று ஆண்டுகளாக நடந்து வந்தன.மறைமலை நகர் சாமியார் கேட் சந்திப்பு, மறைமலை நகர் ரயில் நிலையத்திற்கு செல்லும் முக்கிய பகுதி என்பதால், தினமும் ஆயிரக்கணக்கானோர் இந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.சாலை விரிவாக்கத்திற்கு பின், சாலை அகலமானதால் பெண்கள், முதியவர்கள், பள்ளி குழந்தைகள் சாலையை கடக்க கடுமையாக அவதிப்பட்டனர்.மேலும், அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகின்றன. பொதுமக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு, இந்த பகுதியில் நடைமேம்பாலம் நெடுஞ்சாலை துறை சார்பில் அமைக்கப்பட்டு, ஜுன் மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.இந்த நடைபாதை மற்றும் படிக்கட்டுகளில் விளக்குகள் இல்லாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக, ரயில் பயணியர் மற்றும் பாதசாரிகள், இரவு நேரங்களில் ஆபத்தான நிலையில் சாலையை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.இது குறித்து நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து, நெடுஞ்சாலை துறை சார்பில், நடைபாதை மேம்பாலத்தின் படிக்கட்டுகள் உள்ளிட்ட இருள் சூழ்ந்த பகுதிகளில் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.மின் விளக்குகள் பொருத்தப்பட்டு இரண்டு மாதங்களை கடந்த நிலையில், இதுவரை விளக்குகளுக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் நடைமேம்பாலம் இருளில் மூழ்கி உள்ளது.மேலும், மேம்பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் சில இடங்களில் பெயர்ந்து உள்ளதால், இரவில் செல்வோர் தவறி விழும் அபாயமும் உள்ளது.எனவே, இந்த நடைமேம்பாலத்தில் மின் இணைப்பு வழங்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை